இறந்த தாயின் உடலை மம்மி போல் கட்டி குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து 3 ஆண்டுகள் வாழ்ந்த மகன் கைது செய்யப்பட்டார்.
கொல்கத்தா மாநிலத்தின் பெஹலா பகுதியை சேர்ந்தவர் சுபாப்ரதா மஜும்தார். லெதர் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த இவர், 5 வருடங்களுக்கு முன்னதாக வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார். பின்னர் தன் வீட்டிலேயே பெரும்பாலும் முடங்கியிருப்பார். அவர் வெளியே போவதும், வீட்டிற்கு வருவதும் மர்மமாகவே இருந்துள்ளது. அக்கம்பக்கத்தால் யாருடனும் பேசமால் இருந்து வந்துள்ளார். அவருடன் அவரின் தந்தை கோபால் மஜும்தாரும் வசித்து வந்துள்ளார். சுபாப்ரதாவின் தாய் பீனா கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.
அவர் இறந்து சில நாட்களுக்கு பின் ஐஸ் கிரீம் மற்றும் உணவுகளை பதப்படுத்தும் பெரிய குளிர்சாதப் பெட்டி ஒன்றை சுபாப்ரதா வாங்கியுள்ளார். இரண்டு அடுக்கு கொண்டு அவரது வீட்டின் கீழ் தளத்தில் அவருடன், தந்தையும் தங்கியிருந்துள்ளனர். முதல் தளத்தில் குளிர்சாதனப்பெட்டியை வைத்துள்ளனர். அந்தப் பெட்டி 24 மணிநேரமும் ஓடிக்கொண்டு இருந்துள்ளது. அத்துடன் அதே தளத்தில் அதிக திறன் கொண்ட ஏசியையும் அவர் பொருத்தியுள்ளார். அதுவும் நாள் முழுவதும் இயங்கிக்கொண்டிருந்துள்ளது. இதனையெல்லாம் பார்த்து வந்த அக்கம்பக்கத்தினருக்கு, சுபாப்ரதா மீது சந்தேகம் வந்துள்ளது.
இதனால் பெஹலா பகுதி காவல் நிலையத்திற்கு அக்கம்பக்கதினரில் ஒருவர் ரகசிய புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் சுபாப்ரதா வீட்டை சோதித்த போலீஸார், முதல் தளத்திற்கு சென்றதும் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். ஏனெனில் அங்கு இருந்த
குளிர்சாதனப்பெட்டியில் ஒரு உடல் மம்மி போல் துணியால் சுற்றப்பட்டு பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சுபாப்ரதாவை கைது செய்த போலீஸார், அந்த உடல் குறித்து விசாரித்துள்ளனர்.
விசாரணையில் அது 3 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த அவரின் தாயின் உடல் என்பது தெரியவந்துள்ளது. அத்துடன் தாயின் உடல் உறுப்புகளையும், அமிலத்தில் வைத்து அவர் பாதுகாத்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பென்ஷன் பணத்துக்காக தாயை புதைக்காமல் வைத்திருந்ததாக கூறியுள்ளார். இதுதொடர்பாக சுபாப்ரதாவின் தந்தையிடமும், போலீஸார் விசாரித்து வருகின்றனர்.