ஊத்தங்கரை அருகே முன்விரோதம காரணமாக நண்பரை சுட்டுக்கொன்றேன் என சரணடைந்த குற்றவாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த எட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கமலக்கண்ணன் நேற்று நாட்டு துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பாக அவருடன் வேட்டைக்கு சென்ற உறவினர் சிவா காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், “கமலகண்ணனும் நானும் மாமன் மச்சான் உறவுமுறை. இருவரும் ஒரு வருடமாக துப்பாக்கியுடன் வேட்டைக்குச் செல்வது வழக்கம். இதனிடையே எனக்கு சொந்தமான துப்பாக்கியை கமலக்கண்ணன் வேறு ஒரு நபருக்கு விலைக்கு விற்றுவிட்டார். அதனால் இருவருக்கும் சண்டை நடந்துள்ளது. மேலும் தான் மாமியாருடன் தொடர்பு வைத்துள்ளதாக மது போதையில் இருக்கும் போது பொது இடங்களில் கமலக்கண்ணன் அசிங்கமாக பேசியுள்ளார். என்னுடைய மனைவி கௌசல்யாவையும் அவர் அடித்துள்ளார். இதேபோல் பலமுறை பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
சம்பவ தினத்தன்று இருவரும் இளவம்பாடி காட்டில் வழக்கம் போல வேட்டையாடுவதற்காக கஞ்சா அருந்திவிட்டு சென்றோம். அப்போது போதையில் கமலக்கண்ணனை முன்விரோதம் காரணமாக துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பித்து ஓடிவிட்டேன்” எனத் தெரிவித்தார். இதையடுத்து துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் சிவாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.