முன்னாள் காதலிக்கு கொடுத்த திருமண பரிசுக்குள் வெடிபொருள்... புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த அவலம்!
தனது முன்னாள் காதலிக்கு திருமணமாவதை பொறுத்துக்கொள்ள முடியாத முன்னாள் காதலன், திருமண பரிசாக வெடிகுண்டு வைத்து ஹோம் தியேட்டர் கொடுத்த கொடூர சம்பவம் சத்தீஸ்கரில் நடந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் கபிர்தம் மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.
22 வயதான ஹேமேந்திரா மேராவி என்ற நபருக்கு கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி திருமணம் நடந்திருக்கிறது. திருமணத்திற்கு பிறகு புது மாப்பிள்ளை ஹேமேந்திரா, தங்களுக்கு பரிசாக வந்த ஹோம் தியேட்டரை பிரித்து, அதனுடன் இணைக்கப்பட்டிருந்த Wire-ஐ மாட்டி, On செய்துள்ளார். ஆன் செய்த அடுத்த நொடியே அது வெடித்து சிதறியுள்ளது. இதில் அந்த புது மாப்பிள்ளை, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அருகிலிருந்த 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அந்த நால்வரில், ஹேமேந்திராவின் சகோதரர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். திடீரென வெடிபொருள் வெடித்து சிதறியதில், வீட்டின் ஒருபுற சுவர் மற்றும் வீட்டு கூரை பலத்த சேதமடைந்துள்ளது.
இந்நிலையில் இது மின்கசிவால் ஏற்பட்ட விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் நடத்திய விசாரணையில்தான் அந்த திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி ஹோம் தியேட்டர் வெடித்து சிதறியதால்தான் இத்தகைய விபத்து நேர்ந்தது என்பதை முதலில் தெரிந்துகொண்ட போலீசார், பின் ஹோம் தியேட்டர் திருமணத்தில் பரிசாக வந்தது என்பதை தெரிந்துகொண்டனர். அதன்பிறகு, திருமணத்திற்கு வந்தவர்கள் யார் யார், ஒவ்வொருவரும் என்னென்ன பரிசுப்பொருட்கள் கொடுத்தனர், இந்த ஹோம் தியேட்டர் யார் மூலம் வந்தது என்பது குறித்து அவர்கள் விசாரணை மேற்கொண்டதில், மணமகளின் முன்னாள் காதலன் தான் அந்த ஹோம் தியேட்டரை பரிசாகக் கொடுத்திருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது.
சர்ஜு என்ற அந்த நபரை பிடித்து விசாரித்ததில், தனது முன்னாள் காதலி திருமணம் செய்தது தனக்கு பிடிக்கவில்லை எனவும், எனவே பரிசாக கொடுத்த ஹோம் தியேட்டரின் உள்ளே வெடிபொருளை வைத்து கொடுத்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து சர்ஜுவை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஹேமேந்திராவின் சகோதரர் ராஜ்குமார் (30) மற்றும் அவரது ஒன்றரை வயது குழந்தை உட்பட 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில்தான் இறுதியில் ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.