செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
திருவேற்காடு அடுத்த பெருமாளகரம் புளூட்டோ தெருவைச் சேர்ந்தவர் மோகன் (53). இவரது வீட்டில் தெரு நாய்கள் சிலவற்றை வளர்த்து வந்துள்ளார். அவைகளுக்கு வேண்டிய உணவுகளை தினந்தோறும் தவறாமல் கொடுத்து வந்துள்ளார். இவரது வீட்டின் அருகே வசிக்கும் பாலாஜி என்பவர் வீட்டில் வளர்க்கும் நாய், வீட்டை விட்டு தெருவிற்கு வந்த நிலையில், அதை தெரு நாய் ஒன்று கடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி, இரவு நேரத்தில் உணவில் எலி மருந்தை கலந்து தெரு நாய்களுக்கு வைத்துள்ளார். இதனை சாப்பிட்ட இரண்டு நாய்கள் இறந்து போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மோகன், இது குறித்து திருவேற்காடு போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள திருவேற்காடு போலீசார், விஷம் வைத்து கொல்லப்பட்ட இரண்டு நாய்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேப்பேரி அரசு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
வீட்டில் செல்லமாக வளர்த்த தெரு நாய்களை, பக்கத்து வீட்டு நபர் விஷம் வைத்து கொன்ற சம்பவத்தால் தெரு நாய்களை வளர்த்த உரிமையாளர் பேச முடியாமல் கண் கலங்கியபடி பேசியது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இதையடுத்து பாலாஜியை மிருகங்கள் வதை தடுப்புச் சட்டத்தில், கைது செய்து விசாரித்து வருகின்றனர்.