ஃபேஸ்புக் காதல்: சிங்கப்பூரில் தமிழ் பெண்ணை ஏமாற்றி வரதட்சணை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஃபேஸ்புக் காதல்: சிங்கப்பூரில் தமிழ் பெண்ணை ஏமாற்றி வரதட்சணை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஃபேஸ்புக் காதல்: சிங்கப்பூரில் தமிழ் பெண்ணை ஏமாற்றி வரதட்சணை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Published on

ஃபேஸ்புக் மூலம் சிங்கப்பூர் பெண்ணை காதலித்து ஏற்கனவே திருமணமானதை மறைத்து பதிவுத் திருமணம் செய்து வரதட்சணையாக 72 லட்சத்து 85ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றி மற்றொரு திருமணம் செய்ய முயன்ற புதுக்கோட்டையை சேர்ந்த இளைஞருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2.60 லட்சம் அபராதமும் அவரது தாய், சகோதரி, சகோதரன், சித்தப்பா உள்ளிட்டோருக்கு தனித்தனியாக தண்டனை வழங்கி புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

புதுக்கோட்டை நகரப் பகுதிக்கு உட்பட்ட வசந்தபுரி நகரைச் சேர்ந்தவர் சோலைகணேசன். இவர் திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இந்நிலையில் சென்னை, பெரம்பூர் பகுதியை பூர்வீகமாகக் கொண்டு, சிங்கப்பூரில் குடியுரிமை பெற்று அங்கேயே வசித்துவரும் ஆரோக்கிய மேரி என்ற‌ ஆக்னஸ் சங்கீதா என்பவரை ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானதை மறைத்து ஃபேஸ்புக் மூலம் காதலித்துள்ளார். பின்னர், கடந்த 2010ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பதிவு திருமணம் செய்துள்ளார்.

இதனையடுத்து சோலை கணேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் சிங்கப்பூர் சென்று மகிழ்ச்சியுடன் இருந்த நிலையில் அவரும் அவரது குடும்பத்தினரும் ஆரோக்கியமேரியிடம் 72 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணத்தை வரதட்சணையாக பெற்றுக்கொண்டு, மேலும் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்தது மட்டுமல்லாமல் சோலை கணேசனின் குடும்பத்தினர் ஒன்றுகூடி ஆரோக்கியமேரிக்கு தெரியாமல் சோலைகணேசனுக்கு புதுக்கோட்டையில் 3வது திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இதனை அறிந்த ஆரோக்கியமேரி கடந்த 2018ஆம் ஆண்டு புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சோலைகணேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் அளித்தார். இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சோலைகணேசனை கைது செய்தனர். இந்த வழக்கானது புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரணை செய்த நீதிபதி சத்யா குற்றவாளிகள் மீது சுமத்தப்பட்ட குற்றம் உறுதி செய்யப்பட்டதால் திருமணமானதை மறைத்து ஆரோக்கியமேரியை பதிவு திருமணம் செய்துகொண்டு அவரை ஏமாற்றி மற்றொரு திருமணம் செய்ய முயன்ற சோலைகணேசனுக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2.60 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும் அவரது தாய் ராஜம்மாளுக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனையும் 1.90 லட்சம் ரூபாய் அபராதமும், அவரது சகோதரி கமலஜோதிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் 1.50 லட்சம் ரூபாய் அபராதமும் , அவரது சகோதரர் முருகேசனுக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனையும் 1.60 லட்சம் அபராதமும், அவரது சித்தப்பா நாராயணசாமிக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனையும் 1.90 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து குற்றவாளிகள் அனைவரும் காவல்துறையினர் பாதுகாப்போடு திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

- செய்தியாளர் முத்துப்பழம்பதி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com