மகாராஷ்டிரா மாநிலத்தின் சைபர் பிரிவு போலீஸ் அதிகாரிகள் ‘உங்கள் குழந்தைகள் வெர்ச்சுவலாக கடத்தப்படலாம்’ என பெற்றோர்களை எச்சரித்துள்ளனர்.
இணைய சேவை மற்றும் தொழில்நுட்பத்தை சிறப்பாக பய்னபடுத்த தெரிந்த நயவஞ்சகர்கள் இன்றைய டிஜிட்டல் உலகிற்கு ஏற்ப மாடர்ன் திட்டங்களை வகுத்துள்ளனர்.
குறிப்பாக பெற்றோர்களை தங்கள் வலைக்குள் வீழ்த்த அவர்களது குழந்தையை கடத்தாமலேயே கடத்தி விட்டதாக நம்ப வைத்து, குழந்தைகளை மீண்டும் பத்திரமாக ஒப்படைக்க பிணைத் தொகையை இந்த டெக் திருடர்கள் கேட்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளது சைபர் பிரிவு காவல் துறை.
குழந்தைகள் கடத்தப்பட்டதை நம்ப வைக்க தொழில்நுட்ப தந்திரங்களை இந்த கும்பல் கையாள கூடும் எனவும் காவல் துறை தெரிவித்துள்ளது.
இதுவரை இது மாதிரியான குற்ற சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றாலும் பெற்றோர்கள் அலார்ட்டாக இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர் அதிகாரிகள்.
"இந்த கும்பல் சமூக வலைத்தளங்களில் வேலைக்கு செல்லும் பெற்றோர்களின் குழந்தைகளை டார்கெட் செய்து நட்பாக பழகுவார்கள். மேலும் குழந்தைகளின் செல்போனை போன் கால் எதுவும் வராத படி ஹேக் செய்யவும் வாய்ப்புகள் உள்ளன. அதோடு சமூக வலைத்தளங்களில் இருந்து டவுன்லோட் செய்யப்பட்ட குழந்தைகளின் படங்களை மார்ப் செய்து அதனை குழந்தையின் பெற்றோருக்கு அனுப்பி குழந்தை கடத்தப்பட்டுவிட்டது என நம்ப வைப்பார்கள். அது மாதிரியான அழைப்புகள் ஏதேனும் வந்தால் உடனடியாக போலீசாரை அணுக வேண்டும்” என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.