மதுரையில் காதலிக்க மறுத்த மாணவியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவான இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை மாநகர் அனுப்பானடி வடிவேலன் தெரு பகுதியில் வசிக்கும் சரவணக்குமார் என்பவர், மண்பானை தயாரித்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் எதிர்வீட்டில் வசிக்கும் மணிரத்னம் என்ற இளைஞர் சரவணக்குமாரின் வீட்டில் உள்ள பள்ளி மாணவி ஒருவரை காதலிப்பதாகக் கூறியுள்ளார். ஆனால், அந்த மாணவி மறுத்துவிட்டதோடு தனது தந்தையிடம் கூறியுள்ளார்.
இதனால் சரவணக்குமார் மற்றும் மணிரத்னத்தின் குடும்பத்தினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மணிரத்னத்தை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பாக ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இதையடுத்து அந்த மாணவியை பின் தொடர்ந்த மணிரத்னம், காதலிப்பதாக தொந்தரவு செய்துள்ளார். ஆனால், மாணவி தொடர்ச்சியாக மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிரத்னம் தனது நண்பருடன் பைக்கில் வந்து பெட்ரோல் குண்டை சரவணக்குமாரின் வீட்டில் வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடைபெற்ற பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காதலர்தினம் என்பதால் தன்னுடன் வர வேண்டும் எனவும், தன்னுடைய காதலுக்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும் எனவும் மாணவியிடம் மணிரத்னம் தொடர்ந்து தொந்தரவு அளித்துள்ளார். அதற்கு மாணவி பதிலளிக்காமல் சென்றதன் காரணமாக நேற்று மாணவியின் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியோடியதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குண்டுவீச்சில் ஈடுபட்ட மணிரத்னம் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மணிரத்னம், பார்த்தசாரதி ஆகிய இருவரையும் தெப்பக்குளம் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாகவுள்ள திலிப், அஜய் ஆகிய இருவரையும் தேடிவருகின்றனர்.