மதுரை: காலாவதியான மாத்திரைகளை போதை மாத்திரைகளாக விற்பனை - இருவர் கைது

மதுரை: காலாவதியான மாத்திரைகளை போதை மாத்திரைகளாக விற்பனை - இருவர் கைது
மதுரை: காலாவதியான மாத்திரைகளை போதை மாத்திரைகளாக விற்பனை - இருவர் கைது
Published on

மதுரையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து காலாவதியான மாத்திரைகளை போதை மாத்திரை என விற்பனை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

மதுரையில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் மற்றும் புகார்கள் கிடைத்துள்ளன. இதனையடுத்து மதுரை மாநகர் காவல் ஆணையர் உத்தரவுபடி மாநகர் வடக்கு காவல் துணை ஆணையர் மற்றும் தல்லாகுளம் காவல் உதவி ஆணையர் தலைமையில் போதை மாத்திரை விற்பனை கும்பலை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் தனிப்படை காவல்துறையினர் மதுரை மாநகரில் பல்வேறு பகுதிகளில் தொடர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து நேற்று மதுரை வைகை வடகரை பகுதியில் மதிச்சியம் காவல்நிலைய ஆய்வாளர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும்படியாக வந்த 3 பேரை தடுத்து நிறுத்தினர். அப்போது, விக்கிரமங்கலத்தைச் சேர்ந்த தினேஷ் மற்றும் கவாஸ்கர் என்ற வெள்ளையன் ஆகியோர் தப்பியோடினர்.

இதையடுத்து மதுரை வடகாடுபட்டி கிராமத்தை சேர்ந்த தமிழழகன் (19), என்பவரிடம் விசாரணை நடத்தினர். அதில், மருந்து விற்பனை கடை நடத்தி வரும் முரளிதாஜ் (27) என்பவருடன் வாட்ஸ் அப் மூலமாக தினேஷிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் மூலம் போதை தரும் தூக்கமாத்திரை மற்றும் வலி மாத்திரைகளை மொத்தமாக வாங்கி போதை மாத்திரை என அதிக லாபத்திற்கு விற்பனை செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

இதனையடுத்து முரளிதாஜ் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 17,030 காலாவதியான மாத்திரகள் மற்றம் காலாவதியான 105 டானிக் பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து தமிழழகன் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பலின் தலைவனான முரளிதாஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில தலைமறைவாகியுள்ள தினேஷ் மற்றும் கவாஸ்கரை தனிப்படை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

இந்த நிலையில் 17,030 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், கஞ்சா, போதை மாத்திரைகள் மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை காவல் ஆணையர் செந்தில்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com