மதுரை அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட மருமகனை கம்பியால் அடித்துக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய மாமனார் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் பரவையை அடுத்துள்ள வளவன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகள் சந்தியாவுக்கும், தேனி பெரியகுளத்தைச் சேர்ந்த நாகபாண்டி என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இருவரது குடும்பத்தினர் முன்னிலையில் காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த பின்னர் நாகபாண்டி மாமனார் வீட்டிலேயே தங்கி அப்பகுதியில் கட்டட வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான நாகபாண்டி வேலைக்குச் செல்லாமல் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவி சந்தியாவிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக் கேட்ட மாமனார் முத்துக்குமாருக்கும், மருமகன் நாகபாண்டிக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மாமனார் முத்துக்குமார் மருமகனை இரும்பு கம்பியால் சராமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் மருமகன் நாகபாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் இதையடுத்து மருமகன் குடிபோதையில் மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்துவிட்டதாக முத்துக்குமார் கூறியுள்ளார். இந்நிலையில், நாகபாண்டி மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது அக்கா சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனிடையே இறப்பதற்கு முதல்நாள் நாகபாண்டி தனது செல்போன் வாட்ஸ்-அப்பில் ஆடியோ ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அதில், மாமனார் தன்னை அடித்து சித்தரவதை செய்து வருவதாகவும் காப்பாற்றுமாறும் நாகபாண்டி கெஞ்சிய ஆடியோ வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து நாகபாண்டி இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனை செய்ததில் இரும்புக் கம்பியால் தலையில் பலமாக தாக்கியதால் தான் நாகபாண்டி இறந்துள்ளார் என மருத்துவர்கள் சான்றளித்தனர்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக மாமனார் முத்துக்குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தியதில் மருமகனை அடித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் இதையடுத்து முத்துக்குமாரை கைது செய்த சமயநல்லூர் போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மருமகனை அடித்துக் கொலை செய்து நாடகமாடிய மாமனார் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.