"அதிகமாக சம்பாதிக்கலாம்..".. ஆன்லைனில் வீசப்பட்ட தூண்டில்.. மதுரை தொழிலதிபரிடம் ரூ.1 கோடி மோசடி!

மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை ஆன்லைன் வர்த்தகம் செய்து அதிகமாக சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி ரூபாய் 92 லட்சம் பண மோசடி செய்த மூவர் மாநில சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்புதியதலைமுறை
Published on

செய்தியாளர்: ஜெ.அன்பரசன்

பேஸ்புக் மூலம் பழகி ஆன்லைன் வர்த்தகம் செய்யலாம் என கூறி சுமார் ஒரு கோடி மோசடி... மூன்று நபர்கள் கைது... மாநில சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை ஆன்லைன் வர்த்தகம் செய்து அதிகமாக சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி ரூபாய் 92 லட்சம் பண மோசடி செய்த மூவர் மாநில சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

என்ன நடந்தது?

மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் கடந்த ஜூலை மாதம் பேஸ்புக் மூலமாக நபர் ஒருவர் பழக்கம் ஆகியுள்ளார். அவர் ஆன்லைன் வர்த்தகம் செய்தால் லாபம் பல மடங்கு கிடைக்கும் என கூறியுள்ளார். மேலும், இணையதளம் வாயிலாகவே தாங்கள் ஒரு குழு வைத்திருப்பதாகவும் அதில் பலரும் முதலீடு செய்து ஆன்லைன் வர்த்தகம் செய்து பல மடங்கு லாபம் எடுத்து வருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதனையடுத்து தொழிலதிபரை ஆன்லைன் வர்த்தக வாட்ஸ் அப் குழுவில் இணைத்து அதில் பல மடங்கு லாபம் பார்ப்பது போல் பொய்யான ஆவணங்களை பதிவிட்டும் வந்துள்ளார்.

இதனை நம்பிய தொழிலதிபர் சுமார் 92 லட்சம் வரை வங்கி கணக்கிற்கு பல தவணைகளாக செலுத்தியுள்ளார். ஆனால், லாபம் ஏதும் வராததால் இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது பதில் எதுவும் தெரிவிக்காமல் வாட்ஸ் அப் குழு கலைக்கப்பட்டுள்ளது.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தொழிலதிபர் மாநில சைபர் கிரைம் போர்ட்டலில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் மாநில சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு பணப்பரிவர்த்தனை நடந்த வங்கி கணக்கை வைத்து விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையில் அந்த வங்கி கணக்கு நாமக்கல் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த நிதிஷ்குமார் என்பவருடையது என தெரிய வந்தது.

இதனையடுத்து நாமக்கல் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த நிதிஷ்குமார் அவரது நண்பர்களான சந்திரசேகரன் சவுரியார்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் ஆகிய மூவரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பணக்காரர்கள் மற்றும் தொழிலதிபர்களை குறி வைத்து பேசி அவர்களை நம்ப வைத்து மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

குறிப்பாக மூவரும் கமிஷன் தொகைக்காக "Money Mule" கும்பலாக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. ஒவ்வொருவரும் தங்களின் வங்கி கணக்கை வைத்து அதற்காக லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டதும் தனியாக கமிஷன் தொகை வாங்கிக் கொண்டதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட மூவரின் வங்கி கணக்கில் இருந்த ரூபாய் 21 லட்சம் பணம் முடக்கம் செய்யப்பட்டது.

மேலும், கைது செய்யப்பட்ட நபர்கள் ஆந்திரா, பீகார், குஜராத் ஹரியானா, இமாச்சல்பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்தியபிரதோம். பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா, உத்திரபிரதேசம், மேற்குவங்காளம், நாகலாந்து உள்ளிட்ட பல்வேறு மாநில பணக்காரர்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் ஆசை வார்த்தை கூறி ஆன்லைன் மூலம் ரூ.3 கோடி வரை பண மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்ததுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் லேப்டாப்புகள் செல்போன்கள் சிம்கார்டுகள் வங்கி ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு, இவர்கள் பின்னணியில் யார் யார் உள்ளார்கள்? என்பது குறித்து மாநில சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com