திருப்பரங்குன்றத்தில் 38 நாட்களான ஆண் குழந்தை தண்ணீர் தொட்டியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் பல்லர் மேட்டுத்தெருவை சேர்ந்த வழக்கறிஞர் மஹாராஜா-சாந்தி தம்பதியினர். இவர்களுக்கு ஏற்கெனவே 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் 3வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்து 38 நாட்களான பச்சிளம் குழந்தை கடந்த 15ம் தேதி அருகில் உள்ள வீட்டின் மாடியில் இருந்த தண்ணீர் தொட்டியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்புடைய முந்தைய செய்தி: மதுரை: தண்ணீர் தொட்டியில் வீசப்பட்டு பச்சிளம் குழந்தை கொலை; போலீஸ் விசாரணை
தண்ணீர் தொட்டிக்குள் கைக்குழந்தையை வீசியது யார் என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கில் திடீர் திருப்பமாக பெற்ற தாய் குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசியுள்ளது தற்போது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்து தாய் சாந்தியை கைது செய்துள்ளனர் திருப்பரங்குன்றம் காவல் நிலைய போலீசார். தொடர்ந்து சாந்தியிடம் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் சாந்தியிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையின் குழந்தையை அருகில் தூங்க வைத்து விட்டு, தானும் தூங்கியதாகவும் அப்போது குழந்தை மீது சாய்ந்து தூங்கியத்தில் குழந்தை மூச்சு திணறி உயிரிழந்துவிட்டதாகவும் தனது கணவருக்கு இது தெரிந்தால் விபரீதம் ஏற்படும் என நினைத்து அருகில் உள்ள வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் குழந்தையை வீசிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் திட்டமிட்டு குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.