மதுரையில் 72 கிலோ கஞ்சா பறிமுதல் டீஆறு உள்ளிட்ட 5 சொகுசு கார் 4.30 லட்சம் ரொக்கம் பறிமுதல் கணவரை கைது செய்துள்ள போலீசார் தலைமறைவான மனைவியை தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் சந்திப்பு வழியாக கஞ்சா கடத்த இருப்பதாக மாநகர் காவல் ஆணையரின் தனிப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில் அந்த பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில், 72 கிலோ கஞ்சா மூட்டைகளில் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து காரில் இருந்தவரிடம் விசாரணை நடத்தியதில் அவர், மதுரை ஐயர் பங்களா கண்ணனேந்தல் பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரன் (42) என்பது தெரியவந்தது. இது தொடர்பாக திருப்பாலை காவல்துறையினர் BMW, fortuner உள்ளிட்ட 5 விலையுயர்ந்த சொகுசு கார்கள். 14 செல்போன்கள், ஒரு லேப்டாப், ஒரு தங்க சங்கிலி, உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து பரமேஸ்வரன் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக பரமேஸ்வரனை கைது செய்துள்ள காவல்துறையினர் தலைமறைவாக உள்ள அவரது மனைவி விஜயலட்சுமியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், சொகுசு வாழ்க்கைக்காக ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவரிடம் விரிவான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.