டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை கொள்ளையடித்த நபர்கள், அருகே இருந்த கருப்பசாமி கோயிலில் மதுபாட்டிலை வைத்து படையலிட்ட சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு மதுபாட்டில்கள் கொள்ளை போயின.
கந்தர்வக்கோட்டையில் இருந்து செங்கிப்பட்டிக்குச் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது 600 மதுபாட்டில்கள் கொள்ளை போயிருந்தன. அதோடு, கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் அருகேயுள்ள கருப்பசாமி கோயிலில் மதுபாட்டிலை படையலிட்டு வழிபாடு நடத்தியதும் கண்டறியப்பட்டது. இந்நிலையில் கொள்ளை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக மதுபானங்கள் கிடைக்காததால் டாஸ்மாக் கடைகளில் கொள்ளையடிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.