பஞ்சாப் சிறையில் கைதிகளுக்கு வாங்கப்பட்ட உணவுப் பொருள்களில் கையாடல் செய்த சிறை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கபுர்தலா சிறையில் இருக்கும் கைதிகளின் உணவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அந்த சிறையின் கண்காணிப்பாளர் குர்னம் லால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சுமார் 50 கிலோ எலுமிச்சை பழங்கள் வாங்கப்பட்டதாகக் கணக்கு காட்டப்பட்டுள்ளது என்றும் ஆனால் அவை எதுவும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் சிறையில் ஆய்வு மேற்கொண்ட தணிக்கைக் குழுவினரிடம் கைதிகள் புகார் தெரிவித்தனர். அத்துடன் மேலும் பல மோசடி புகார்கள் கைதிகளால் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் கோடைக்காலம் தொடங்கியதைத் தொடர்ந்து ஒரு கிலோ எலுமிச்சை பழத்தின் விலை 200 ரூபாய் வரை உயர்ந்தது. அந்த சமயத்தில் சுமார் 50 கிலோ எலுமிச்சை பழங்கள் வாங்கப்பட்டதாக போலி ரசீதுகள் தயாரித்து மோசடி நடந்தது அம்பலத்துக்கு வந்துள்ளது.
மேலும், கபுர்தலா சிறையில் தணிக்கைக் குழுவினர் மேற்கொண்ட ஆய்வின்போது கைதிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்றதாகவும், போதுமானதாக இல்லை என்பதும் கண்டறியப்பட்டது. மேலும் சிறைக் கைதிகளின் உணவுக்காக காய்கறிகள், சப்பாத்தி மாவு உள்ளிட்டவை வாங்கியதில் முறைகேடு நடந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்கலாம்: சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு