பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள திருநாவுக்கரசு உள்பட நான்கு குற்றவாளிகளையும் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க கோவை ஆட்சியர் ராஜாமணி உத்தரவிட்டுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. குறிப்பாக அதிமுக குற்றவாளிகளை காப்பாற்ற போராடுகிறது என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினருக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக அதிமுக பிரமுகர் நாகராஜ் என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்துள்ளார். அவருடன் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் செய்தியாளர்களிடம், “பொள்ளாச்சியில், பெண்ணைத் துன்புறுத்தல் செய்த வழக்கில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு சபரீஷ், சதீஸ், வசந்த குமார், திருநாவுக்கரசு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். புகார்தாரரின் சகோதரரை மிரட்டியதற்காக, நாகராஜ், செந்தில், வசந்தகுமார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண்ணைத் துன்புறுத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும், குண்டர் தடுப்புச் சட்டப் பிரிவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில், அதிமுகவை சேர்ந்தவர்கள் கைகலப்பு வழக்கில்தான் சம்பந்தப்பட்டுள்ளார். பெண்ணைத் துன்புறுத்திய வழக்கில் அவர் ஈடுபடவில்லை.
இந்தக் கும்பல் பணம் பறித்துள்ளது தொடர்பாக யாரேனும் புகார் கொடுத்தால், கூடுதல் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள திருநாவுக்கரசு உட்பட நான்கு குற்றவாளிகளையும் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க கோவை ஆட்சியர் ராஜாமணி உத்தரவிட்டுள்ளார்.