கோவில்பட்டியில் எஸ்பிசிஐடி போலீஸ் என்று கூறி வணிகர்களிடம் நூதன முறையில் பணம் வசூலித்த போலி ஆசாமி கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி 2-ஆவது பங்களா தெருவைச் சேர்ந்தவர் தங்க திருப்பதி என்பவரின் மகன் கௌதம் (30). இவர் கோவில்பட்டி மார்க்கெட் சாலையில் அரிசிக் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த ஒருவர் தான் எஸ்பிசிஐடி போலீஸ் என அறிமுகப்படுத்திக் கொண்டு, தனது கார் பழுதாகி நிற்பதாகவும், அதை சரி செய்ய ரூ.3 ஆயிரம் தேவைப்படுகிறது, தான் பர்சை வீட்டில் வைத்து விட்டு வந்துவிட்டதாகவும், வீட்டிற்கு சென்றதும், தங்களுக்கு கூகுள்பே மூலம் திருப்பித் தருகிறேன் என்று அந்த டிப்டாப் ஆசாமி தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய கௌதம் ரூ.3 ஆயிரம் பணத்தை கொடுத்ததோடு கூகுள்பே போன் நம்பரையும் பேப்பரில் எழுதிக் கொடுத்துள்ளார். பணத்தினை பெற்றதும் வெளியே சென்ற அந்த டிப்டாப் ஆசாமி, கௌதம் எழுதி கொடுத்த பேப்பரை கிழத்து போட்டுள்ளார். பேப்பரை கிழித்ததைக் கண்ட கௌதம், அவர் மீது சந்தேகப்பட்டு பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார்;. இதையடுத்து ஏற்பட்ட தகராறில் கௌதமுக்கு, அந்த டிப்டாப் ஆசாமி கொலை மிரட்டல் விடுத்தது மட்டுமின்றி, 'தூக்கி உள்ளே வைத்து அடித்து துவைத்து விடுவேன்' என்று மிரட்டியதாக தெரிகிறது.
இதையெடுத்து அருகில் இருந்த கடைக்காரர்கள் உதவியுடன் அந்த டிப்டாப் ஆசாமியை பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற கிழக்கு காவல் நிலைய போலீஸார், அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மாணிக்கவாசகர் நகரைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் தட்சிணாமூர்த்தி (47) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து, தட்சிணாமூர்த்தியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்