மனித கழிவுகளை துப்புரவு பணியாளர்கள் கைகளாலேயே அள்ளிய அவலம் - எழும் எதிர்ப்பலை!

மனித கழிவுகளை துப்புரவு பணியாளர்கள் கைகளாலேயே அள்ளிய அவலம் - எழும் எதிர்ப்பலை!
மனித கழிவுகளை துப்புரவு பணியாளர்கள் கைகளாலேயே அள்ளிய அவலம் - எழும் எதிர்ப்பலை!
Published on

கூடலூர் அருகே கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளியில் கொட்டபட்ட மனித கழிவுகளை, பாதுகாப்பு உபகரணங்களை வழங்காமல் ஒப்பந்த அடிப்படையிலான துப்புரவு பணியாளர்களை கொண்டு வெறும் கைகளால் மீண்டும் அள்ளிய சம்பவம் அதர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவர்சோலை பகுதியில் உள்ள பேரூராட்சி பொது கழிப்பிடத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியை இன்று சுத்தம் செய்யும் பணிகள் நடந்தது. அப்போது கழிவுநீர் தொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட மனித கழிவுகள் அதே பகுதியில் உள்ள தேயிலை செடிகளுக்கு இடையே கொட்டப்பட்டது. பொதுமக்கள் நடமாடும் பகுதியில் மனித கழிவுகள் கொட்டப்பட்டதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதனையடுத்து கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர், பேரூராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த அடிப்படையிலான துப்புரவு பணியாளர்களை கொண்டு, அருகில் குழி தோண்டி மனித கழிவுகளை அள்ளி குழியில் புதைத்து இருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு முக கவசம் மற்றும் கையுறை உள்ளிட்ட எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை. தேயிலை செடிகளுக்கு இடையே கொட்டப்பட்டிருந்த மனித கழிவுகளை துப்புரவு பணியாளர்கள் வெறும் கைகளால் அப்புறப்படுத்திய கொடுமையான நிகழ்வு நடந்திருக்கிறது. அப்படி துப்புரவு பணியாளர்கள் வெறும் கைகளால் மனித கழிவுகளை அள்ளும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களிலும் அதிகமாக பரப்பப்பட்டு வருகிறது.

மனிதக் கழிவுகளை மனிதர்களை கொண்டு அள்ளுவதற்கு ஏற்கனவே மத்திய அரசின் தடை உள்ள நிலையில், தேவர் சோலை பகுதி பேரூராட்சி அதிகாரிகள் அலட்சியமாக நடந்துகொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தேவர்சோலை பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரின் இந்த மனித உரிமை மீறல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com