மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் அரசு ஆர்.ஜி கர் மருத்துவமனையில், கடந்த 9ம் தேதி அன்று பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் இந்த கொடூரச் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்த விவகாரம் போலீஸாரின் கைகளில் இருந்து சிபிஐ கைக்கு மாற்றப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
முக்கிய குற்றவாளி சஞ்சய் ராய் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் போலீஸ் கஸ்டடியில் வைக்கப்பட்டுள்ளார். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வெளிவந்த தகவல்களை வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், கொலை சம்பவத்தில் மருத்துவமனைக்கு உள்ளேயும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று கொல்லப்பட்ட மருத்துவரின் பெற்றோர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
சிபிஐ அதிகாரிகளின் விசாரணையை தொடர்ந்து, கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து பதில் அளிக்க மறுத்துள்ள மருத்துவரின் தந்தை, இழப்பீட்டுத் தொகையை எக்காரணம் கொண்டும் வாங்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். ஒரு வேளை தான் இழப்பீட்டை வாங்கினால், அது மகளை காயப்படும் என்று கூறியுள்ள அவர், இழப்பீடு தேவையில்லை. நீதியே வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ள நிலையில், நீதிக்காக எங்களுடன் நிற்கும் அனைவரும் எனது மகன்கள் மற்றும் மகள்களே என்று உருக்கமாக பேசியுள்ளார் மகளை இழந்து நிற்கும் தந்தை. கொல்லப்பட்ட மருத்துவருக்கு நீதி கேட்டு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று பேரணி நடத்தியது குறிப்பிடத்தக்கது.