கையெழுத்திடாமல் சுற்றித் திரிந்த பிரபல ரவுடி பினுவை மீண்டும் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கொளத்தூர் மூர்த்தி நகர் வினாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவுடி பினு(51). இவர் மீது 4 கொலை வழக்கு மற்றும் ஆயுத தடைச்சட்டம் உட்பட 19 வழக்குகள் உள்ளன. கடந்த 2018ஆம் ஆண்டு ரவுடி பினு மாங்காடு பகுதியில் ரவுடிகளை அழைத்து அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த ரவுடி பினு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்பு நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த பினு கையெழுத்திடாமல் சுற்றித்திரிந்த போது திருவள்ளூரில் வைத்து மீண்டும் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதே போல கள்ளத்துப்பாக்கி விற்பதாக எழுந்த புகாரையடுத்து 2019ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி போலீசாரால் ரவுடி பினு கைது செய்யப்பட்டார், மீண்டும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். கடந்த 2 வருடங்களில் மட்டும் 4 முறை ரவுடி பினு கைது செய்யப்பட்டு வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக காவல் நிலையத்தில் கையெழுத்திடாமல் தலைமறைவாக இருந்து வந்த ரவுடி பினு, சூளைமேட்டில் மீண்டும் மாமூல் வசூலில் ஈடுபடுவதாக சூளைமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் புழல் பகுதியில் தலைமறைவாக இருந்து வந்த ரவுடி பினுவை இன்று போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரவுடி பினுவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.