பெரியார் புலிகள் காப்பக வனப்பகுதியில் மான்களை வேட்டையாடி சமைத்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வண்டிப் பெரியார் அருகே வல்லக்கடவு வனச்சரகம் உள்ளது. இப்பகுதியில் கம்பியால் சுருக்கு வைத்து “மிளா” வகை மான்கள் வேட்டையாடப்படுவதாகவும், மான் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாகவும் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து புலிகள் காப்பக இணை இயக்குனர் ஷில்பா உத்தரவின்படி, வனச்சரக அதிகாரி சுரேஷ்பாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் வல்லக்கடவு பகுதியை சேர்ந்த ஷாஜி (46) என்பவரது வீட்டை சோதனையிட்டபோது, அவரது வீட்டில் மான் கறி சமைத்துக்கொண்டிருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்த வனத்துறையினர் சமைத்த மான் கறிக்குழம்பு, பொறியல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், வல்லக்கடவு வனப்பகுதியில் கம்பியால் “சுருக்கு” வைத்து மிளா மானை வேட்டையாடியதாக ஒப்புக்கொண்டார்.
அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த மான் வேட்டையில் இணைந்து செயல்பட்ட அதே பகுதியை சேர்ந்த சைமன் (52), சோமன் பிள்ளை (74), நிஷாந்த் (40) ஆகிய மூவரையும் வனத் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 கிலோ மான் இறைச்சியும், வனத்தில் இருந்து சுருக்கில் சிக்கி உயிரிழந்த மானை எடுத்துவர பயன்படுத்தப்பட்ட ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நால்வரையும் பீருமேடு கிளைச்சிறையில் போலீஸாரால் அடைக்கப்பட்டனர். சமீபகாலமாக தேக்கடி பெரியார் புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் வன விலங்குகளை வேட்டையாடுவது தொடர்வதால் வனத்துறையினரின் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வேட்டையாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.