செய்தியாளர்: ஐஷ்வர்யா
சென்னை எண்ணூரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது நண்பரான கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்ட்ரோ வில்சன் என்பவர் மூலம் கோவை இடிகரைச் சேர்ந்த சியாம் (எ) ஜாய் மோகன் என்பவர் அறிமுகமாகி உள்ளனர். இந்நிலையில், சியாம் (எ) ஜாய் மோகனும் அவரது மனைவி சஜிதாவும், தங்களிடம் விலை மதிப்பற்ற பொருளான இரிடியம் இருப்பதாகவும், அதனை வெளிநாட்டில் விற்றால் கோடிக் கணக்கில் லாபம் பெறலாம் எனவும்கூறி சீனிவாசனை நம்ப வைத்துள்ளனர்.
இந்நிலையில், இரிடியத்தை சோதனை செய்வதற்காக அறிவியல் நுட்பம் தெரிந்த சேகர் என்பவரை சீனிவாசனுக்கு அறிமுகம் செய்து வைத்து இரிடியத்தை சோதனை செய்ய சீனிவாசனிடம் இருந்து 10 லட்சங்களை மூவரும் பெற்றுள்ளனர். இதையடுத்து வருண்பிரசாத் ரெட்டி, ரவீந்திர பிரசாத், அருண்குமார் மற்றும் ஆனந்த வெங்கடேசன் ஆகியோர் சோதனை செய்யப்பட்ட இரிடியத்தை உண்மையானது என்றும், அதனை வெளிநாட்டில் உள்ள கம்பெனியில் பல கோடி மதிப்பில் விற்றுக் கொடுப்பதாகவும் கூறி, அதற்கு முன் பணமாக சீனிவாசனிடம் இருந்து மேலும் ரூ.15 லட்சம் பணத்தை பெற்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து எவ்வித தகவலும் வராமல் இருக்கவே சந்தேகமடைந்த சீனிவாசன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனிடம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் மாவட்ட குற்றப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தீவிர புலன் விசாரணை மேற்கொண்ட போலீசார், இந்த வழக்கில் தொடர்புடைய கேரள மாநிலத்தை சேர்ந்த சியாம் (எ) ஜாய் மோகன், சஜிதா ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.