செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பைனாவு பகுதியைச் சேர்ந்தவர் அன்னக்குட்டி (62). இவரது மகன் ஜின்ஸ். ஜின்ஸ்-க்கு மனைவியும் மூன்று வயதில் லியா என்ற பெண் குழந்தையும் உள்ளனர். அன்னக்குட்டி வீட்டிற்கு அருகிலேயே வசித்து வருகிறார். அன்னக்குட்டியின் மகள் ப்ரின்சி, ஜெர்மனியில் செலவிலியராக பணியாற்றி வருகிறார். பிரின்சியின் கணவர் சந்தோஷ். (50) தொடுபுழாவில் டீக்கடை வைத்துள்ளார்.
பிரின்சி, வெளிநாட்டில் வேலை பார்த்து சம்பாதிக்கும் பணத்தில் சிறு தொகையை கணவர் சந்தோஷிற்கு கொடுத்து விட்டு, மீதமுள்ள பணத்தை தனது மகளின் எதிர்காலம் கருதி பாதுகாப்பாக வைத்திருக்க தனது தாயார் அன்னக்குட்டிக்கு அனுப்பி வந்துள்ளார்.
இந்நிலையில், தனது மனைவியின் முழு சம்பள பணத்தையும் தனக்கு தரக்கோரி சந்தோஷ், தனது மாமியார் மற்றும் மைத்துனர் ஜின்ஸ் இடமும் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
ஆனால், மகளின் முழு சம்பள பணத்தை அன்னக்குட்டி தர மறுத்த நிலையில், சந்தோஷிடம் இருந்து விவாகரத்து கேட்டுள்ளார் மனைவி பிரின்சி. இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ், கடந்த ஜூன் ஐந்தாம் தேதி இடுக்கி பைனாவில் உள்ள மாமியார் அன்னக்குட்டி வீட்டிற்கு வந்துள்ளார். கொலை செய்யும் நோக்கோடு வந்த அவர், தனது மாமியார் அன்னக்குட்டி மற்றும் மைத்துனர் ஜின்ஸ்யின் மகள் ஆகியோர் லியா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
தகவலறிந்து நிகழ்விடம் வந்த போலீஸார், தீக்காயங்களுடன் போராடிய அன்னக்குட்டி மற்றும் அவரது பேத்தி லியா ஆகியோரை மீட்டு கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அன்னக்குட்டி 40 சதவீத தீக்காயங்களுடனும், லியா 20 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து மாமியார் அன்னக்குட்டி கொடுத்த புகாரின் பேரில் பைனாவு போலீஸார் மருமகன் சந்தோஷ் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், 10 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த சந்தோஷ், மாமியார் அன்னக்குட்டி மற்றும் மைத்துனர் ஜின்ஸ் ஆகிய இருவர் வீடுகளுக்கும் நள்ளிரவில் தீ வைத்துள்ளார். இதில் மாமியார் வீடு முழுவதுமாக எரிந்த நிலையில், மைத்துனர் வீடும் பாதியளவு எரிந்தது. இரு வீட்டிலும் ஆளில்லாததால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து சந்தோஷ் மீது இரண்டாவது வழக்குப் பதிவு செய்த இடுக்கி போலீஸார் சந்தோஷை தேடி வந்தனர்.
சந்தோஷ் போடி வழியாக தமிழகத்திற்கு தப்பிச் சென்றதாக இடுக்கி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தேனி மாவட்ட போலீஸாரின் உதவியுடன் தலைமறைவாக இருந்த சந்தோஷை, போடிநாயக்கனூர் முந்தல் சோதனைச் சாவடியில் கைது செய்த இடுக்கி போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தொடுபுழா சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து இடுக்கி எஸ்.பி., அருண்குமார் கூறும்போது... மாமியார் மற்றும் மைத்துனரின் குழந்தையை எரித்துக் கொல்ல முயன்ற வழக்கில், தேனி மாவட்ட போலீஸார் உதவியுடன் குற்றம் சுமத்தப்பட்ட சந்தோஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.