புதுச்சேரியில் அமெரிக்க நாட்டை சேர்ந்த மூதாட்டியை பாலியல் வன்முறை செய்த வழக்கில் காஷ்மீரை சேர்ந்த வாலிபரை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
அமெரிக்கா நியூ ஜெர்சியை சேர்ந்தவர் பத்ரிசியா போஃல்டஸ் (64). மூதாட்டியான இவர் கடந்த ஜனவரி மாதம் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளார். அப்போது லால் பகதூர் சாஸ்திரி சாலையில் பெட்டிக்கடை வைத்து நடத்திவரும் காஷ்மீரை சேர்ந்த மேஹ்ராஜ் பாத் (35) என்பவரின் கடைக்குச் சென்று சில பொருட்களை பத்ரிசியா வாங்கி உள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதம் இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா சென்று வந்த பத்ரிசியா நேற்றைய முன்தினம் மீண்டும் புதுச்சேரி வந்து நகர பகுதியில் ஒரு ஹோட்டலில் அரை எடுத்து தங்கியுள்ளார். அப்போது அவருக்கு பழக்கம் ஏற்பட்டிருந்த மேஹ்ராஜிடம் தனக்கு சில உதவிகள் செய்து தருமாறு கேட்டுள்ளார். இதனையடுத்து நேற்றைய முன்தினம் இரவு பத்ரிசியா தங்கி இருந்த அறைக்குச் சென்ற மேஹ்ராஜ் அவரை பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதில் அந்த மூதாட்டிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றபோது அங்கிருந்த மருத்துவர்கள் இது தொடர்பாக ஒதியஞ்சாலை காவல் நிலையத்திற்கு அளித்த தகவல் அளித்தனர். அதன்பேரில் மூதாட்டி பத்ரிசியாவிடம் போலீசார் புகார் பெற்றுக்கொண்டு மேஹ்ராஜ் பாத்தை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாபட்டு சிறையில் அடைத்தனர். அமெரிக்க நாட்டை சேர்ந்த மூதாட்டியை காஷ்மீரை சேர்ந்த வாலிபர் புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.