செய்தியாளர்: நவ்பல் அஹமது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த தங்கபாண்டியன் என்பவரது மகன் காசி. இவர் மீது கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் பண மோசடி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட போலீசாரால் காசி கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
பொருளாதார வசதியுடன் காணப்படும் இளம் பெண்களுடன் நட்பாக பழகி அவர்களை தனது காதல் வலையில் சிக்க வைக்கும் காசி, சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த பெண்களே தன்னை காதலிக்கும் அளவிற்கு அவர்களை ஏமாற்றியுள்ளார். நம்பிக்கையின் அடிப்படையில் அவருடன் நெருங்கிப் பழகும் பெண்களை வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டிருந்தார். அதேபோல் நூற்றுக்கும் மேற்பட்ட இளம் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளையும் இது போன்று மோசடி செய்துள்ளது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இவர் மீது போக்சோ உள்ளிட்ட 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது, இதைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து காசியின் கூட்டாளிகளான டேசன் ஜினோ, தினேஷ் கௌதம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மேலும் துபாயில் இருந்த ராஜேஷ் என்பவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டிருந்தது,
இந்நிலையில், நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வந்த நிலையில், பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இந்திய தண்டனை சட்டம் Ipc 376(2)N பிரிவின் கீழ் காசிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பு வழங்கினார். இந்நிலையில், காசியின் நண்பன் ராஜேஷ் சிங் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை விமான நிலையம் வருவதாக சிபிசிஐடி போலீசருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் சென்னை சென்ற சிபிசிஐடி போலீசார், ராஜேஷை கைது செய்தனர். இதையடுத்து அவரை நாகர்கோவில் அழைத்து வந்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.