கன்னியாகுமரி மாவட்டம் வட்டம் அருகே மைலோடு பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் குமார் (42). நாம் தமிழர் கட்சியில் பொறுப்பில் இருந்து வந்த இவர், கன்னியாகுமரி அரசு போக்குவரத்து பணிமனையில் மெக்கானிக்காகவும் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஜெமினி, அங்குள்ள புனித மிக்கோல் அதிதூதர் தேவாலயத்திற்கு சொந்தமான மதர் தெரஸா பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், சேவியர் குமார் ஆலயத்தின் வரவு செலவு கணக்குகளை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து சமூக வலைதலங்களிலும் பதிவிட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஜெமினியை பள்ளி நிர்வாகம் திடீரென பணிநீக்கம் செய்துள்ளது. இதையடுத்து சேவியர் குமார் மீண்டும் வாட்ஸ்அப் குழுக்களில் ஆலய கணக்கு வழக்குளை கேட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து பேசுவதற்காக கடந்த 20 ஆம் தேதி சேவியர் குமாரை தூய மிக்கேல் அதிதூதர் ஆலய வளாகத்திலுள்ள பங்குத்தந்தை இல்லத்திற்கு வருமாறு பங்கு தந்தை ராபின்சன் அழைத்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த சேவியர் குமாரிடம் பங்குத்தந்தை ராபின்சன் வாக்குவாத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஒரு கட்டத்தில் பங்குதந்தை ராபின்சன், அவரது சகோதரர் மற்றும் திமுக கட்சியை சேர்ந்த நபர் ஆகியோர் அயர்ன் பாக்ஸால் சேவியர் குமாரை அடித்துக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவை எடுத்துக் கொண்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் ஆலயத்தில் குவிந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை எடுக்க முற்பட்டனர். ஆனால், உடலை எடுக்க விடாமல் முற்றுகையிட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து திமுக பிரமுகர் மற்றும் இரு பங்கு தந்தையர்கள் மீது இரணியல் போலிசார் வழக்குப்பதிவு செய்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு உடலை ஒப்படைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய வின்சென்ட் மற்றும் ஜெஸ்டஸ் ஆகிய இருவரை கைது செய்த போலீசார், தனிப்படை அமைத்து முக்கிய குற்றவாளிளான பங்கு தந்தை மற்றும் திமுக பிரமுகரை தேடி வருகின்றனர். இதைத் தொடர்ந்து பங்குத்தந்தை ராபின்சன், ஆலயத்தில் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.