குமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே உள்ள கச்சேரிநடை பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜி. இவர் வெளிநாட்டில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்குக் காக்கவிளை பகுதியைச் சேர்ந்த அனிஷா என்ற பெண்ணுடன் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான 4வது மாதம் ஷாஜி வெளிநாட்டிற்குச் சென்றுள்ளார்.
பின்னர் ஒரு வருடம் கழித்து விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளார். வெளிநாட்டில் இருந்த போது மாதந்தோறும் அனுப்பிய பணத்திற்கான கணக்கை அனிஷாவிடம் கேட்டுள்ளார். அதற்கு அனிஷா மழுப்பலான பதில் கூறி வந்ததாகத் தெரிகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்த விஷயத்தைத் திசை திருப்பும் விதமாக ஷாஜியுடன் அவரது சகோதரிகளை வைத்துச் சந்தேகமடைந்தும் , சொந்தமாக வீடு இல்லை எனக் கூறி தகராறு செய்து விட்டு தாயாரின் வீட்டிற்கு அனிஷா சென்றுள்ளார். பலமுறை சமரசம் செய்ய முயன்றும் அனிஷா ஒத்து வராமல் இருந்துள்ளார்.
இதனையடுத்து விடுமுறை முடிந்து மீண்டும் ஷாஜி வெளிநாடு சென்றுள்ளார். இதைத் தெரிந்து கொண்ட அனிஷா மீண்டும் ஷாஜி தங்கியிருந்த வாடகை வீட்டில் வந்து வசித்து வந்துள்ளார். மீண்டும் வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை ஷாஜி அனுப்பி வந்துள்ளார். பணத்தை எல்லாம் வாங்கி வைத்துக்கொண்டுள்ளார் அனிஷா.
பின்னர் வெளிநாட்டு வேலையை முடித்துவிட்டு ஊருக்கு வருவதாக ஷாஜி கூறியுள்ளார். அனிஷா மீண்டும் தகராறு செய்துவிட்டு ஷாஜி வருவதற்குள் வீட்டிலிருந்த நகை,பணம் மற்றும் சான்றிதழ்களை எடுத்துச் சென்றுள்ளார். வீட்டிற்கு வந்து பார்த்த ஷாஜி அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து மனைவியின் செல்போன் எண்ணிற்குத் தொடர்பு கொண்டு கேட்ட போது, உன்னுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த ஷாஜி நாகர்கோவிலில் குடும்பநல நீதிமன்றத்தில் மனைவியைச் சேர்த்து வைக்குமாறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில் ஷாஜியின் வீடு அமைந்திருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பால் விற்பனை செய்து வந்த இளைஞர் ஒருவருடன் அனிஷா ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இது குறித்த தகவலறிந்த ஷாஜி கொல்லங்கோடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.