இந்தியாவில் நீதித்துறை சிறப்பாக இல்லை என்றாலும், மாநில அரசின் கையில் இருக்கும் அதிகாரங்களைக் கொண்டு முதல்வர் வழிகாட்டுதல் படி சில நல்ல மாற்றங்களை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது என நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் வழக்கறிஞர் சங்கங்களுக்கும் சட்டப்புத்தகம் வழங்கும் நிகழ்வு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள பார் கவுன்சிலில் நடைபெற்றது. இதில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், "நீதிமன்றங்களுக்கு தேவையான கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது இந்த பட்ஜெட்டில் கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் நிதியின் மூலமாக இதற்கான பணிகள் நடைபெறும். கொரோனா, மழை, வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு தொடர் இடர்கள், நிதி நெருக்கடிகள் இருப்பினும், நிதியமைச்சர் தமிழகத்தின் கடன் சுமையை குறைத்துள்ளார்.
வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்கங்களின் அனைத்து கோரிக்கைகளும், ஏற்கனவே முதலமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. எங்களுக்கு எப்போதும் வழக்கறிஞர் துறையின் முக்கியத்துவம் தெரியும். எதிர்க்கட்சியாக இருந்தபோது எங்களுக்கு உடனிருந்தவர்கள் வழக்கறிஞர்கள். எங்கெங்கெல்லாம் நீதிமன்றங்கள் வேண்டுமோ, காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டுமோ அங்கெல்லாம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மெடிக்கிளைம் திட்டத்தில் வழக்கறிஞர்களை இணைப்பது ஒரு பெரிய விஷயமல்ல. வழக்கறிஞர் மருத்துவக்காப்பீட்டு திட்டம் குறித்து முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். வழக்கறிஞர் நிதிகளை உயர்த்தித்தர நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், "இந்தியாவில் நீதித்துறை சிறப்பாக இல்லை. எனினும், மாநில அரசின் கையில் இருக்கும் அதிகாரங்களைக் கொண்டு முதல்வர் வழிகாட்டுதல் படி சில நல்ல மாற்றங்களை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.
பழைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இங்கே பதவியில் இருந்தபோது, அவரை சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அரசியல் காரணங்களால் ஏதேனும் சிக்கல்கள் வருமோ என தயங்கி சந்திக்கவில்லை. அதற்குள்ளாகவே அவரை இங்கிருந்து மாற்றிவிட்டார்கள். அதன்பின் அவரே அழைத்தார். நேரில் சந்தித்தேன். தமிழக நீதித்துறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள், சீர்திருத்தங்கள் குறித்த பட்டியலை என் கையில் கொடுத்தார். கட்டாயம் அதை செய்து முடிப்போம்" என்று தெரிவித்தார்.