அண்ணாமலை பல்கலைகழக மருத்துவ மாணவர் நாவரசு கொலைவழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற ஜான் டேவிட் என்பவரை, முன்கூட்டியே விடுதலை செய்ய கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ப.க.பொன்னுசாமியின் மகன் நாவரசு, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வந்தார். இவர் கடந்த 1996ஆம் தேதி கொல்லப்பட்ட நிலையில், அவ்வழக்கில் சீனியர் மாணவர் ஜான் டேவிட் என்பவருக்கு கடலூர் சிறப்பு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. புழல் சிறையிலடைக்கப்பட்டுள்ள ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுவிக்கக்கோரி அவரின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில் ஆஜரான ஜான் டேவிட் தரப்பு வழக்கறிஞர், தருமபுரி பேருந்து எரிப்பு, மேலவளவு கொலை உள்ளிட்ட வழக்குகளில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.
கொடூர கொலை வழக்குகளில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட நிலையில், ஜான் டேவிட்டுக்கு மட்டும் பாரபட்சம் காட்டப்படுவதாக வாதிட்டார். தமிழகத்தில் அரசின் அதிகாரத்துக்குட்பட்ட விவகாரத்தில் குற்றவாளி எவ்வித உரிமையையும் கோர முடியாது என அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கமளித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழ்நாடு அரசு உத்தரவில் தலையிட முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.