நகை அடகுக்கடையில் உரிமையாளரிடம் மிரட்டி பணம் கேட்டதால், அவர் சானிடைசர் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரம் அடுத்த ஜமீன் பல்லாவரம், லத்தீப் காலனியை சேர்ந்தவர் கோகா ராம் சவுத்ரி(45). இவர் பல்லாவரம், பிவி வைத்தியலிங்கம் சாலையில் கடந்த 15 ஆண்டுகளாக நகை அடகுக்கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த நித்தியானந்தம்(30) என்பவர் இவரை கடந்த மூன்று வருடங்களாக மிரட்டி அவ்வப்போது பணம் பறித்து வந்ததாக கூறப்படுகிறது.
இவரும் 500, 1000 ரூபாய் எனக் கொடுத்து வந்துள்ளார். இதே போல் நேற்றும் நித்தியானந்தம் ரூ.2000 பணம் வேண்டும் என மிரட்டிக் கேட்டதாக தெரிகிறது. இதனால் பயந்து போன கோகா ராம் சவுத்ரி மன உளைச்சலுக்கு ஆளாகி, கிருமிநாசினியை எடுத்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அவரது சகோதரர் பாபுலாலுக்கும் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
விரைந்து வந்த பாபுலால் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றார். மேலும் இதுகுறித்து காவல்நிலையத்திலும் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நித்தியானந்தம் என்பவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் பணம் கேட்டதை ஒப்புக் கொண்டார். அவர் மீது ஏற்கனவே எவ்வித வழக்கும் இல்லை என்பதால் அவரிடம் பல்லாவரம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.