தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் இருவரும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்து வரும்போதே காயத்துடனேயே வந்தார்கள் என கோவில்பட்டி கிளை சிறை காவலர் மாரிமுத்து வாக்குமூலம் அளித்துள்ளார்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையானது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி பத்மநாபன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது வழக்கின் சாட்சியாக கோவில்பட்டி கிளை சிறை காவலர் மாரிமுத்து ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
அதில் அவர் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் இருவரும் சாத்தான்குளத்தில் இருந்து வரும்போதே காயதத்துடனேயே வந்தார்கள் என்றும், பெனிக்ஸை கிளை சிறையில் இருந்து சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றது போலீசார் முத்துராஜா மற்றும் செல்லதுரை ஆகிய இருவரும் தான் என்றும் சாத்தான்குளத்தில் இருந்து அழைத்து வந்த காவலர்களை நீதிபதி முன்பு அடையாளம் காட்டி சாட்சியம் அளித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன் பின்னர் குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்களின் குறுக்கு விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையானது வருகிற 29 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.