சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் ஊராட்சி சார்பில் கழிவுகள் கொட்டப்படுவதை நிறுத்த வேண்டும் என அப்பகுதி கரையோரத்தில் வசித்து வரும் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள கொள்ளிடத்தில் கொள்ளிடம் ஆறு அமைந்துள்ளது. இந்த ஆறானது அங்கிருந்து 18 கி.மீ தூரம் பயணித்து பழையார் கடலில் கலக்கிறது. கொள்ளிடம் ஆற்றின் வலது கரை உள்ளே உள்ள ஆற்றுப்படுகையில் ( இரயில்வே பாலத்திற்கு அருகே) கொள்ளிடம் ஊராட்சியில் இருந்து சேகரிக்கப்படும் ஒட்டு மொத்த குப்பைகளும், கழிவுகளும் கொட்டப்படுவதாக பல ஆண்டுகளாக அப்பகுதி அருகே வசிக்கும் மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்த போதும், தொடர்ந்து அங்கு குப்பைகள் கொட்டப்படுவதாக கூறப்படுகிறது. இதனிடையே இதனை சாதகமாக்கிய தனிநபர்களும் அந்தப் பகுதியில் மருத்துக்கழிவுகள், இறைச்சி கழிவுகள்,மதுபாட்டில்கள் உள்ளிட்டவற்றை கொட்டிவருகின்றனர்.
மழைக்காலங்களில் இந்தக் கழிவுகள் கடலுக்கு அடித்துச் செல்லப்படுவதால் ஆற்று நீர் முழுவதும் மாசுபடுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். முன்னதாக கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்காக இந்த ஆற்றுநீரை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது அந்த நீரானது கால்நடைகளுக்கு கூட பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியிருக்கிறது.
ஆகவே பொதுமக்கள் நலன் கருதி கொள்ளிடம் ஆற்றில் ஊராட்சி நிர்வாம் கழிவுகள் கொட்டுவதை தடை செய்தும், அத்துமீறி அபாயகரமான கழிவுகளை கொட்டும் தனிநபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் கொள்ளிடம் கரையோர கிராமமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.