உசிலம்பட்டி அருகே 7 மாத பெண்குழந்தை உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிசுக் கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் ஒருபகுதியாக, புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சக்கரப்பநாயக்கணூர் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி - பாண்டிச் செல்வி தம்பதிக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர்களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டாவது குழந்தையாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த பெண் குழந்தை கடந்த 07.03.2022 அன்று தண்ணீரில் விழுந்து உயிரிழந்தாக கூறி மறைமுகமாக வீட்டின் அருகிலேயே புதைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. பிறந்து 7 மாதமே ஆன அந்த பெண் குழந்தையின் இறப்பில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து, கிராம நிர்வாக அதிகாரி முத்துமணி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் விக்கிரமங்கலம் போலிசார் வழக்குப் பதிவு செய்தனர்.
அந்த வழக்குப்பதிவின்கீழ், அக்குழந்தை பெண் சிசு கொலையா என்ற கோணத்தில் இன்று உசிலம்பட்டி தாசில்தார் விஜயலட்சுமி, காவல் ஆய்வாளர் கண்ணாத்தாள் முன்னிலையில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிவக்குமார், ராதாமணி தலைமையிலான மருத்துவக்குழுவினர் உடலை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்தனர். உசிலம்பட்டி பகுதியில் படிப்படியாக பெண் சிசு கொலைகள் குறைக்கப்பட்டிருந்தாலும் அவ்வப்போது நடைபெறும் இது போன்ற சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றது.