சென்னையில் குப்பை தொட்டி அருகில் மனித எலும்பு கூடுகள் வீசப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து அதுகுறித்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த எலும்பு கூடுகள், மருத்துவக்கல்லூரி மாணவர்களின் ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டதா என்ற கோணத்தில் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொள்வதாக சொல்லப்படுகிறது.
சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் தணிக்காச்சலம். இவர் 58வதுவார்டு தற்காலிக துப்புறவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் தணிக்காச்சலம் குப்பை வண்டியில் சென்று குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டபோது சூளை காளத்தியப்பா தெரு, வீச்சூர் முத்தையா சந்திப்பு அருகே உள்ள மாநகராட்சி குப்பை தொட்டியில் குப்பைகளை எடுப்பதற்காக தணிக்காச்சலம் சென்ற போது, குப்பை தொட்டிக்கு அருகே இருந்த ஒரு பிளாஸ்டிக் கவரில் எலும்பு கூடு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரியான தீபக் என்பவருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்துள்ளார். அங்கு கவரில் எலும்பு கூடு இருப்பதை உறுதி செய்து, இது குறித்து வேப்பேரி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார் அவர்.
புகாரின் பேரில் வேப்பேரி போலீசார் கவரில் உள்ள எலும்பு கூடுகளை கைப்பற்றி, சம்பவ இடத்திற்கு அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து அவற்றை சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கைப்பற்றப்பட்டுள்ள எலும்பு கூடுகளை ஆய்வுக்காக தடயவியல் துறைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். முதலில் எலும்புகூடுகளை ஆய்வு செய்த போது அதில் பேனாவால் எழுதப்பட்டிருந்த குறியீடுகள் இருந்துள்ளது. ஆகவே மருத்துவக்கல்லூரி மாணவர்கள் படிப்பிற்காக இந்த எலும்பு கூடுகளை பயன்படுத்தி விட்டு வீசப்பட்டதா என சந்தேகம் எழுந்துள்ளது. அதே பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த ஆண்டு பெசன்ட் நகர் பகுதியில் இதே போல குப்பை தொட்டியில் எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டது. அதனை குப்பை தொட்டியில் வீசிய மருத்துவக் கல்லூரி மாணவர் என்பது பின்னரே தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.