‘துரோகம்... நயவஞ்சகம்... கொலை’ - மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய நயவஞ்சக கணவன்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே மனைவியை கொன்றுவிட்டு கணவன் நாடகமாடிய விவகாரத்தில், அவர் வேறு ஒரு பெண்ணையும் ஏமாற்றி இருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்தவர் சபரிநாதன். அவரது மனைவி சேலம் ஆத்தூரைச் சேர்ந்த தரணிதேவி. ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், கருத்து வேறுபாடால் 6 மாதங்களாக தாய்வீட்டில் இருந்துள்ளார் தரணிதேவி. மனைவியை சமரசம் செய்வதாகக்கூறி காரில் அழைத்துவரும் போது, கோட்டைமேடு மேம்பாலத்தில் தன்னை தாக்கி, மனைவி கழுத்தில் இருந்த 7 சவரன் தங்கச் சங்கிலி வழிப்பறி செய்யப்பட்டதாகவும், இதில் தரணிதேவி உயிரிழந்துவிட்டதாகவும் சபரிநாதன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல்துறை விசாரணையில், சபரிநாதன் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறியதால், சந்தேகமடைந்த காவலர்கள் தங்கள் பாணியில் விசாரித்தனர். அதில், சபரிநாதன் மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடியது அம்பலமானது. சிறையில் அடைக்கப்பட்ட சபரிநாதன் வெளியிட்ட தகவல்களை கேட்டு காவல்துறையினரே அதிர்ந்துவிட்டனர்.
கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே சபரிநாதன், சகமாணவி ஒருவரை திருமணம் செய்து தனி வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போதுதான் சபரிநாதனுக்கு தரணிதேவியுடன் திருமணம் நிச்சயமாகியுள்ளது. அதை தடுக்க முயன்ற கல்லூரி மாணவி சபரிநாதனின் குடும்பத்தினரிடம் நியாயம் கேட்டுள்ளார். தற்கொலைவரை சென்ற அவரை சமாதானப்படுத்தி தரணிதேவி - சபரிநாதன் திருமணம் நடத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி, தரணிதேவிக்கு தான் ஏமாற்றப்பட்டது குறித்து ஆதாரங்களுடன் கடிதம் அனுப்பியுள்ளார். அதனால் ஏற்பட்ட பிரச்னையால் தாய் வீட்டிற்கு சென்ற தரணிதேவியை நயவஞ்சகமாக அழைத்து வந்த சபரிநாதன், கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, நாடகமாடியுள்ளார்.
காதல் என்ற பெயரில் ஒரு பெண்ணையும், திருமணம் என்ற பெயரில் மற்றொரு பெண்ணையும் ஏமாற்றி கொலை செய்த சபரிநாதனை தீர விசாரித்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என கண்ணீர் விடுகின்றனர் மகளை இழந்த தரணிதேவியின் பெற்றோர்.