கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், சக சிறைவாசிகள் இருவர் கல்லால் அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் கேத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (56). இவர் தனது மகனைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக கடந்த 2015 முதல் கோவை மத்திய சிறையில் உள்ளார். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி அதிகாலை உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கோவை அரசு மருத்துவமனைக்கு அவர் அழைத்துவரப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதில் இறந்த ராமசாமியின் தலையிலும் உடம்பிலும் காயங்கள் இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தாரா ? அல்லது சிறை கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தாரா ? என்ற சந்தேகம் நிலவியது.
இதையடுத்து இவரது உடலை 3வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வேலுச்சாமி முன்னிலையில் உடற் கூறு ஆய்வு செய்யப்பட்டது. உடற் கூராய்வு முடித்த பிறகு கோவை மத்திய சிறையில் நீதிபதி வேலுச்சாமி விசாரணை நடத்தினார். இச்சம்பவம் தொடர்பாக சிறை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜும் விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் ராமசாமி தலையில் தாக்கப்பட்டதால் உயிரிழந்ததாக உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது. பின்னர் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ராமசாமியுடன் ஒரே கொட்டகையில் தங்கியிருந்த சுரேஷ், சுப்ரமணி ஆகிய இருவரும் பீடி கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் கல்லால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும் கொலை செய்த கல்லையும், துணியையும் சிறையிலிருந்து காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து சந்தேக மரணம் என்பதை மாற்றி கொலை மற்றும் தடயங்களை மறைப்பது ஆகிய பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்து கொலை செய்த இருவரையும் கைது செய்தனர். இருவரும் கொலை செய்துவிட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக நாடகமாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.