பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு, நல்லூர், நடுப்புணி ஆகிய பகுதிகளில் அதிக அளவில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து தினந்தோறும் டிப்பர் லாரிகள் மூலமாக கேரளாவுக்கு கற்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு அனுமதி இல்லாமல் டிப்பர் லாரிகள் கற்களை எடுத்துச் செல்வதாகவும் அனுமதி பெற்ற லாரிகள் அதிக அளவில் கற்களை கேரளாவுக்கு எடுத்துச் செல்வதாகவும் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் அறிவுறுத்தலின்படி ஆய்வாளர் கோகுல கிருஷ்ணன், செல்வி ஆகியோர் நேற்று நள்ளிரவு ஆய்வு மேற்கொண்டதில், வடக்கி பாளையம் வழியாக கேரளாவுக்கு செல்லும் டிப்பர் லாரிகளைப் பிடித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 55 டன் எடை ஏற்றிச் செல்ல வேண்டிய டிப்பர் லாரியில் 70 டன் கற்கள் ஏற்றியும் 35 டன் கற்கள் ஏற்றிச் செல்ல வேண்டிய டிப்பர் லாரியில் 50 டன்னும் ஏற்றி செல்வது தெரியவந்தது.
இந்த சோதனையில் அதிக எடை ஏற்றிச் சென்ற ஏழு டிப்பர் லாரிகளை பிடித்து பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். ஏழு டிப்பர் லாரிகளுக்கு 4.26 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். மேலும் அதிக எடை ஏற்றிச் சென்றதற்காக ஓட்டுநர்கள் உரிமம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்தனர்.