விமானப்படை அதிகாரி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றம் இழைத்தோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விமானப்படைத் தளபதி உறுதியளித்துள்ளார்.
விமானப்படையின் புதிய தளபதியாக பொறுப்பேற்றுள்ள ஏர் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முப்படைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுவதில் நாங்கள் முனைப்பு காட்டி வருகிறோம். ரஃபேல் விமானங்கள் இணைக்கப்பட்ட பின் இந்திய விமானப்படையின் பலம் அதிகரித்துள்ளது. இந்திய எல்லையில் சீனா தனது கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினாலும் இந்தியாவின் போர் தயார் நிலையில் உள்ளதால், இந்தியா எவ்விதத்திலும் பாதிக்கப்படாது” போன்ற கருத்துகளை பகிர்ந்தார்.
இதைத்தொடர்ந்து அவரிடம் கோவையில் விமானப்படை அதிகாரி சக அதிகாரியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் புகார் குறித்து கேள்விகேட்ட போது, விசாரணை அறிக்கை அடிப்படையில் குற்றவாளிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியிடம் தடை செய்யப்பட்ட இரட்டை விரல் பரிசோதனை செய்யப்பட்டதாக வெளியான செய்தியையும் விமானப்படை அதிகாரி அப்போது மறுத்தார்.
முன்னதாக இவ்விவகாரத்தில் புகாரளித்திருந்த பெண் அதிகாரி தனது முதற்கட்ட தகவலறிக்கையில், "வன்கொடுமை நிகழ்ந்த நாளில் எனது அறையில் பயன்படுத்தப்பட்ட பெட்ஷீட்டை இரண்டு பெண் மருத்துவர்களிடம் அளித்துள்ளேன். குற்றம்சாட்டப்பட்டவரின் விந்தணுக்கள் இருந்த படுக்கை விரிப்பை எடுத்துக்கொள்ளும்படி அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். அதே நாள் நான் இவ்விவகாரம் குறித்து புகார் அளித்த போது, இரவோடு இரவாக நான் வேறு அறைக்கு மாற்றப்பட்டேன். எனக்கு அன்று அங்கிருந்தவர்கள் மேற்கொண்ட சோதனைகளில், எனக்கு வன்கொடுமை நடக்கவேயில்லை என தெரிவித்தனர்.
அன்றிரவு விமானப்படை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனையின் போது, நான் இரண்டு விரல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, எனது கடந்த கால பாலியல் வரலாறு பற்றி கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த அதிகாரிகள் முறையாக என்னிடம் விசாரணை நடத்தவில்லை” என கூறியிருந்ததாக சொல்லப்பட்டது.