திருத்தணியிலிருந்து சித்தூர் சென்ற அரசு பேருந்தில், பயணியிடம் கொடுத்த மீதி பணத்தில் பத்து ரூபாய் கிழிந்த நோட்டை மாற்றி தர கேட்டதற்கு, தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்ற நடத்துனரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து சித்தூர் நோக்கி அரசு பேருந்து தடம் எண் 164ஏ என்ற அரசு பேருந்து இன்று புறப்பட்டது. இதில் பயணி ஒருவர் கேஜி கண்டிகை பகுதியில் ஏறி சோளிங்கர் வரை செல்ல வேண்டும் என்று இருபது ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளார். அதற்கு மீதி சில்லறை கொடுத்த நடத்துனர் தனஞ்செழியன் என்பவர், கிழிந்து போன பத்து ரூபாய் நோட்டை திருப்பி கொடுத்துள்ளார். இதனால் வேறு நோட்டு கொடுங்கள் என பயணி நடத்துனரிடம் கேட்டதற்கு, இதைத்தான் தர முடியும் என்று கூறியுள்ளார், என்னங்க இப்படி சொல்றிங்க இதை யாரும் வாங்கமாட்டார்கள் மாற்றி கொடுங்கள் என்று மீண்டும் கேட்டதற்கு, கொடுக்க முடியாது என தகாத வார்த்தைகளால் பேசி தாக்கவும் முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பயணி செய்வதறியாது தவித்துள்ளார். இந்நிலையில் ”தான் ஒரு திமுக பிரமுகர் என்றும், திமுகவின் தொழிற்சங்கமான தொ.மு.ச. வில் நிர்வாகியாக” இருப்பதால் என்னைப் பற்றி யாரிடம் புகார் கொடுத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது எனவும் பேசியுள்ளார். பயணியை தகாத வார்த்தைகளால் பேசும் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.