ஹைதராபாத்தில் போலீஸ் முன்பே நடுரோட்டில் கறிக்கடைக்காரர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத், சஞ்சல்குடா பகுதியை சேர்ந்தவர் ஷாகிர் குரேஷி. இவர் மட்டன் கறிக்கடை நடத்தி வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த அப்துல் காஜா என்பவரின் உறவினர் குரேஷியின் ஆட்டோ ரிக்ஷாவை வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார்.
இதனிடையே காஜாவின் உறவினருக்கும் குரேஷிக்கும் வாடகை தொடர்பாக பிரச்னை இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் குடிபோதையில் குரேஷியின் கறிக்கடைக்கு வந்த காஜா, குரேஷியிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
Read Also -> டிசம்பர் 4-ல் ஆர்ப்பாட்டம் - ஸ்டாலின் அறிவிப்பு
வாக்குவாதம் முற்றிய நிலையில் குரேஷி தனது மட்டன் கடையில் இருந்து கத்தியை எடுத்துள்ளார். அவரிடம் இருந்து கத்தியை கைப்பற்றிய காஜா குரேஷியை சரமாரியாக குத்தி கொலை செய்தார்.
இதுகுறித்து அப்பகுதியில் இருந்த சாலை போக்குவரத்து காவலர் அளித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து அப்துல் காஜாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து கத்தியையும் கைப்பற்றினர்.
இதுகுறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த காஜா, நான் குரேஷியை சமாதானப்படுத்த வந்த நிலையில் அவர் கத்தியை எடுத்தார் எனவும் என் குடும்பத்தை பற்றி தவறாக பேசினார் எனவும் தெரிவித்தார்.