மதம் மறந்து காதல் திருமணம் புரிந்த போதும், குழந்தைக்கு பெயர் வைப்பதில் மதம் பார்க்கப்பட்டதால் கோபத்தில் காதல் மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது.
கோவை ஜிஎம் நகரை சேர்ந்த எட்வினா, தாயின் எதிர்ப்பை மீறி அதே பகுதியைச் சேர்ந்த முரளி என்பவரை காதல் திருமணம் செய்தார். இவர்கள் போத்தனூர் நூர்பாத் பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 35 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு அன்னலட்சுமி என்ற பெயரை முரளி தேர்ந்தெடுத்துள்ளார். ஆனால், எட்வினா தனது தாயையும் தன் உறவினர்களையும் சமாதானப்படுத்த குழந்தைக்கு ரியா என்ற பெயரை தேர்வு செய்துள்ளார். குழந்தைக்கு பெயர் வைக்கும் விஷயத்தில் இருவருக்கும் சச்சரவு இருந்த நிலையில், எட்வினா தன் குழந்தைக்கு ரியா என்ற பெயரை இறுதி செய்து மாநகராட்சியில் பதிவு செய்து சான்றிதழ் பெற்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முரளி, மனைவி எட்வினாவை கழுத்தை நெரித்து கொன்றார்.
சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்த நிலையில் கொலை செய்ததை முரளி ஒப்புக்கொண்டார். வீட்டை சமாதானம் செய்ய தன்னை மதம் மாற்ற எட்வினா முயற்சித்தாகவும், பின்னர் குழந்தைக்கும் தன் மதப் பெயரையே சூட்டியதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாகவும் முரளி வாக்குமூலம் அளித்துள்ளார்.
இரு மணங்கள் இணைந்த திருமண பந்தத்தில் மதம் குறுக்கிட்டதால் இப்போது தாயை இழந்து தந்தையின் அரவணைப்பையும் இழந்து தவிக்கிறது இவர்களின் 35 நாள் குழந்தை.