விருதுநகரில் ஐந்து சவரன் நகையை வரதட்சணையாக தரவில்லை என மனைவி கழுத்தை நெறித்து சித்ரவதை செய்த புகாரில் கணவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை ராஜாஜி அரசு தலைமை மருத்துவமனையில் சந்தியா என்ற அந்த பெண்ணுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகளான இந்த பெண்ணுக்கு 3 ஆண்டுகளுக்கு முன் சொந்தத்திலேயே திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், வரதட்சணையாக 5 சவரன் நகையை போடச்சொல்லி சந்தியாவை கணவர் முத்துமணி குடும்பத்தினர் துன்புறுத்தி வந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
5 சவரனை தராவிட்டால், மகனுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்யப்போவதாக முத்துமணி குடும்பத்தினர் அடித்து உதைத்ததில் காயம்பட்ட சந்தியா கடந்த மாதம் பெற்றோரிடம் வந்து அவர்கள் உதவியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மீண்டும் புகுந்த வீடு சென்ற சந்தியாவை கடந்த 26 ஆம் தேதி மீண்டும் முத்துமணி குடும்பத்தினர் சித்ரவதை செய்ததாக தெரிகிறது. கயிற்றை கொண்டு கழுத்தை இறுக்கி அவரை கொலை செய்ய முயன்ற நிலையில், சகோதரர் வந்து சந்தியாவை மீட்டதாகக் கூறப்படுகிறது.
ராஜபாளையத்தில் இருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சந்தியா, சுயநினைவை இழந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். 5 சவரன் நகைக்காக சந்தியாவை சித்திரவதை செய்த புகாரில் கணவர் முத்துமணி, மாமனார் பேச்சியப்பன், மாமியார் முத்துக்கருப்பி, கணவரின் அண்ணன் மாரியப்பன் ஆகியோர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.