கோழி பிரச்னையால் இரு வீட்டார்களுக்கு இடையே ஏற்பட்டச் சண்டையில் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில், கணவன் மற்றும் மனைவி இருவரும் கைது செய்யப்பட்டனர்.
ஆவடி அடுத்த ஆரிக்கம்மேடு அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார் (45). வாகன ஓட்டுனரான இவரது மனைவி துர்காதேவி. இவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களது வீட்டின் அருகில் வசிப்பவர் அன்பழகன் (49). இவர் வெல்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அழகு மீனா (42).
கடந்த சில தினங்களுக்கு முன்பு சசிகுமார் கோழி ஒன்றை வாங்கியுள்ளார். கடந்த 18-ஆம் தேதி மதியம் சசிகுமாரின் வீட்டிலிருந்த கோழி அன்பழகன் வீட்டு ஓரமாக சென்றதாகத் தெரிகிறது. இதனையடுத்து அன்பழகனின் மனைவி அழகுமீனா கோழியை கல்லால் அடித்ததாகச் சொல்லப்படுகிறது. இதனை சசிகுமாரின் மனைவி துர்கா தேவி கண்டித்து உள்ளார். இதனால் இரு வீட்டாருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
இதில், ஆத்திரமடைந்த அன்பழகன், சசிகுமாரை அடித்து கீழே தள்ளி கொலை செய்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அன்பழகனை கைது செய்து நேற்று காஞ்சிபுரம் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இன்று மதியம் அவரது மனைவி அழகுமீனாளை காவல்துறையினர் கைது செய்தனர்.