தேன்கனிக்கோட்டை அருகே மான்களை வேட்டையாடி சமைத்து விற்பனை செய்ததான உணவக மேலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள குள்ளட்டி வனப் பகுதியை ஒட்டி தனியாருக்குச் சொந்தமான உணவகம் உள்ளது. இங்கு கேரளாவைச் சேர்ந்த பிரசாந்த் (43), என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், குடிசலூர் கிராமத்தைச் சேர்ந்த மல்லேசன் (32), மாதேஷ் (38) ஆகியோர் குள்ளட்டி வனப்பகுதியில் மான்களை வேட்டையாடி இந்த உணவகத்தில் சமைத்து விற்பனை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த ஒசூர் வனக்கோட்ட வனக் காப்பாளர் கார்த்திகேயினி விசாரணை நடத்தினார்.
இதையடுத்து தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேஷ், பிரிவு வனவர், வனக்காப்பாளர், வனத்துறையினர் ஆகியோர் மான்களை வேட்டையாடியதாக உணவக மேலாளர் பிரசாந்த், மாதேஷ், மல்லேசன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இதையடுத்து. அவர்கள் 3 பேருக்கும் தலா ரூ.40 ஆயிரம் வீதம், மொத்தம் ரூ.1.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.