துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் சடலம் - துப்பு துலங்கியது எப்படி?

துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் சடலம் - துப்பு துலங்கியது எப்படி?
துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் சடலம் - துப்பு துலங்கியது எப்படி?
Published on

கடந்த ஜனவரி 21 ஆம் தேதி பள்ளிக்கரணை அருகே உள்ள பெருங்குடி குப்பை கிடங்கில் குப்பைகளை கிளரும் போது பிளாஸ்டிக் கோணி பையில் ஒரு பெண்ணின் வலது கை மற்றும் இரண்டு கால்கள் வெட்டப்பட்ட நிலையில் கிடந்தன.

மேலும் கையில் சிவன் பார்வதி படமும் டிராகன் படமும் பச்சை குத்தப்பட்டிருந்தது. இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பச்சைக்குத்தப்பட்டிருந்த ஒரு அடையாளத்தை வைத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால் போலீசாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. விசாரணையில் சிறு துப்புகூட கிடைக்கவில்லை. இதையடுத்து காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் ஆல்பின்ராஜ் தலைமையில் பத்து பேர் கொண்ட தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

இதையடுத்து பெண்ணின் பாகங்களில் உள்ள அடையாளங்களை வைத்து அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் விசாரித்து வந்தனர். சென்னை, ஆந்திரா மற்றும் கர்நாடகா குற்ற ஆவண காப்பகம் மூலமாக தகவல்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தது. மேலும் குப்பை ஏற்றி வந்த லாரி ஓட்டுநர்கள் விசாரணை மேற்கொண்ட போலீசார் குப்பை கிடங்கு பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்கள் பதிவுகளை ஆய்வு செய்தனர். ஆனால் பலன் கிட்டவில்லை.

இதைத்தொடர்ந்து பெண்ணின் கையில் இருந்த அடையாளங்களை போலீசார் துண்டு பிரசுரங்கள் மூலம் விநியோகம் செய்தனர். அப்போது கொலை செய்யப்பட்ட பெண் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தியா என்பதும் சினிமா மோகத்தில் சென்னைக்கு வந்து காணமல் போனதும் தெரியவந்தது. ஆனால் இதுகுறித்து போலீசில் எவ்வித புகாரும் பதிவு செய்யப்படவில்லை.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் சென்னை ஜாபர்கான்பேட்டையில் வசித்து வந்த பெண்ணின் கணவரான பாலகிருஷ்ணன் என்பவரை விசாரணை செய்தனர். அப்போது மனைவி சந்தியாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு கடந்த ஜனவரி 19 ஆம் தேதி இரவு ஜாபர்கான்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் கொலை செய்து மறுநாள் உடலை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் கோணிப்பையில் அடைத்து எம்.ஜி.ஆர் நகரில் இருந்த பல குப்பைத்தொட்டிகளில் வீசிசென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர் அடையாளம் காட்டியதன்பேரில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மேலும் ஒரு உடல் பாகத்தை போலீசார் கண்டறிந்தனர். மீதம் உள்ள சந்தியாவின் பாகங்களை தேடி வருகின்றனர். பாலகிருஷ்ணன் - சந்தியா தம்பதிக்கு 12 ஆம் வகுப்பு படிக்கும் மகனும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். பாலகிருஷ்ணன் ‘காதல் இலவசம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்ணின் ஒரு கை மற்றும் இரு கால்களை மட்டும் வைத்து திறம்பட விசாரணை செய்து குற்றவாளியை கண்டுபிடித்த தனிப்படை போலீசாருக்கு காவல் ஆணையாளர் பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com