ஜீவானம்சம் கொடுக்காததால் கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை மருமகளே துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த முழுமையான தகவலை பார்க்கலாம்.
சென்னை சவுகார்பேட்டை பகுதியில் 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்து யானைக்கவுனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த மூன்று பேரின் உடல்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன. 4 பேர் கொண்ட மருத்துவர்கள் இந்த பிரேத பரிசோதணையில் ஈடுபட்டுள்ளனர்.
என்ன துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளனர், எந்த வகை தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பன குறித்து பிரேத பரிசோதனைக்கு பிறகு தெரிய வரும். நேற்று நடைபெற்ற தடவியல் சோதனையில் அந்த வீட்டிலிருந்து துப்பாக்கி தோட்டாக்களின் பகுதிகளும் கிடைத்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மருமகள் ஜெயமாலாதான் இந்த கொலைகளை அரங்கேற்றியதாக காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. அவரை பிடிப்பதற்கு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இந்த வழக்கில் ஜெயமாலாவுக்கு உடந்தையாக யாரெல்லாம் இருந்தார்கள் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலைகளை அரங்கேற்றிவிட்டு ஜெயமாலா காரில் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே கணவர் ஷீத்தல் குடும்பத்துடன் ஜெயமாலா குடும்பத்தினர் 5 முறை சண்டையிட்டுள்ளதாகவும் ஷீத்தல் குடும்பத்தினர் ஜெயமாலா குடும்பத்தினர் மீது கடந்த 29 ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ரூ.5 கோடி ஜீவானம்சம் கேட்டு ஜெயமாலா கணவர் குடும்பத்தை சுட்டுக்கொன்றாரா என கேள்வி எழுந்துள்ளது. புனேவை சேர்ந்த ஜெயமாலா அந்த மாநிலத்தில் ஷீத்தல் மீது வரதட்சணை கொடுமை புகார் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மூன்று பேரையும் சுடும்போது சத்தம் கேட்காமல் இருக்க துப்பாக்கியில் சைலன்சர் பயன்படுத்தியாக தகவல் வெளியாகியுள்ளது.