சென்னையில் மருந்துக்கடைகள் மூலம் போதை மருந்துகளை விற்பனை செய்ததாக 3 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொடூரமான குற்றங்களில் ஈடுபடும் குற்றாவளிகள் இத்தகைய போதை மருந்துகளை பயன்படுத்துவதும் தெரியவந்துள்ளது.
சென்னையில் கடந்த சில மாதங்களாகவே நடைப்பெற்ற நகை பறிப்பு சம்பவங்கள் பொதுமக்களை அதிர்ச்சி அடையவைத்தன. நடுரோட்டில், பட்டப்பகலில் பொதுமக்களை தாக்கிவிட்டு கொள்ளையர்கள் நகைகளை பறித்துக்கொண்டு ஓடும் சம்பவம் தொடர்பான காட்சிகளை பார்க்கும்போது எப்படி இந்த கொள்ளையர்களுக்கு இவ்வளவு தைரியம்..? என எல்லோருக்கும் ஒரு கேள்வி எழும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை பற்றி சிறிதும் பயப்படாமல் அசால்டாக நகைகளை பறித்துக்கொண்டு அவர்கள் பைக்கில் வேகமாக பறந்து விடுகின்றனர். எப்படியும் போலீசார் நம்மை பிடித்துவிடுவார்கள் என்று அவர்கள் துளியும் கவலைபடுவதில்லை. ஒருவேளை நகைகளை பறிக்கும் நேரத்தில் பொதுமக்கள் கைகளில் சிக்கிக் கொண்டால் தர்ம அடி கிடைக்கும் என்பதும் அவர்களுக்கு உரைத்தபாடில்லை. நகைகளை பறிகொடுப்பதோடு மட்டுமில்லாமல் பாதிப்பிற்குள்ளாகும் பெண்கள் பல நேரங்களில் கடுமையான தாக்குதலுக்கும் ஆளாக்கப்படுகின்றனர். தங்கள் நகைகள் பறிபோகிறது என்ற எண்ணத்தில் அதனை காப்பாற்ற நினைக்கும் பெண்களை தரையோடு தரையாக இழுத்துச் சென்றும் கொள்ளையர்கள் நகைகளை பறித்துக் கொண்டுதான் தப்புகின்றனர்.
இதனிடையே குற்றவாளிகள் எப்படி இத்தனை கொடூரமாக நடந்து கொள்கிறார்கள் என்ற சந்தேகம் போலீசாருக்கு வந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும் போதை தரக்கூடிய ஒரு மருந்தை உட்கொண்டு குற்றவாளிகள் கொடூரமாக நடந்துகொள்வது தெரியவந்துள்ளது. இருமலுக்கு சாப்பிடும் மருந்தை ஒரு பாட்டில் முழுவதுமாக குடித்தால் போதை உண்டாகும் எனவும் கூறப்படுகிறது. இந்த மருந்து விற்பனை செய்யும் கடைகள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, சிந்தாதிரிப்பேட்டையில் இரண்டு மருந்துகடைகளில் போதை மருந்து விற்பனை செய்யப்படுவதை அறிந்த காவல்துறையினர், சாஹுல் ஹமீது, இப்ராஹிம், வேல்முருகன் ஆகிய 3 பேரை பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில், கடைகளில் இருந்து மருந்துபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.