தன் மகளை காதலித்த வாலிபரை, திருமணம் செய்து வைப்பதாகக் கூறி தமிழகம் அழைத்து வந்து கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தாண்டரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமண செட்டியார் (55). இவர், பெங்களூருவில் வசித்து காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், பக்கத்து கடையை சேர்ந்த வசந்த் (எ) நவீன் (25) என்பவர் லட்சுமண செட்டியாரின் மகளை காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த லட்சுமணன் அவரை பலமுறை கண்டித்தும் தொடர்ந்து காதலித்து வந்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த லட்சுமணன், "ஓசூர் அடுத்த பேரிகை அருகே உள்ள தாண்டரப்பள்ளி கிராமத்தில் இருக்கும் என் உறவினர் வீட்டிற்கு மகளை அனுப்பியுள்ளேன். நீ வந்தால் உறவினர்களிடம் பேசி மகளை திருமணம் செய்து வைக்கிறேன்” எனக்கூறி வசந்தை அங்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை இருவரும் நன்றாக மது அருந்தியுள்ளனர். நள்ளிரவில் போதையில் இருந்த வசந்தை உருட்டுக் கட்டை மற்றும் கற்களைக் கொண்டு தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து லட்சுமணன், இன்று காலை பேரிகை காவல் நிலையத்தில் சரணடைந்து, நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் கூறினார். இதைத் தொடர்ந்து பேரிகை போலீசார் லட்சுமணனை கைது செய்து சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த கொலை ஜாதி ரீதியாக நடந்த ஆணவக் கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.