தேனியில் உயிருடன் இருந்த பச்சிளம் குழந்தையை, இறந்துவிட்டதாக கூறி வாலியில் அடைத்து பெற்றோரிடம் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த 6 மாத கர்ப்பிணியான ஆரோக்கிய மேரிக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டது. தேனி கானாவிளக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. குறைபிரசவம் என்பதால் குழந்தை இறந்துவிட்டதாக கூறி மூடிப்போட்ட வாளியில் அடைத்து மருத்துவமனை ஊழியர்கள் ஒப்படைத்துள்ளனர்.
அதே வாளியில் குழந்தையை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்ற தம்பதி, அடக்கம் செய்ய முயன்றபோது, குழந்தைக்கு இதயத் துடிப்பு இருந்தது தெரியவந்தது. உடனடியாக மீண்டும் கானாவிளக்கு அரசு மருத்துவமனையில் குழந்தையை அழைத்துச்சென்று தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது.
உயிருடன் இருந்த குழந்தை இறந்ததாகக் கூறி உறவினரிடம் ஒப்படைக்கப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனும், தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதனும் புதிய தலைமுறைக்கு தகவல் அளித்துள்ளனர்.