கும்பகோணத்தில் இந்து முன்னணி பிரமுகர் தன்னுடைய வீட்டில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்பட்ட நிலையில், தன் வீட்டின் முன் தானே மண்ணெண்ணெய் பாட்டில் வீசியது அம்பலமானதால் போலீசார் கைதுசெய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கும்பகோணம் மேலக்காவேரி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பஞ்சநாதன் மகன் சக்கரபாணி (38). கொத்தனார் வேலைசெய்து வரும் இவர், இந்து முன்னணியின் மாநகர செயலாளராக கடந்த ஏழு ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை சக்கரபாணி வீட்டு வாசலில் மண்ணெண்ணெய் வாசனையுடன், கண்ணாடி பாட்டில் துகள்கள் சிதறி கிடந்தது. சக்கரபாணியும் அருகில் உள்ளவர்களும் வாசலில் கிடந்த மண்ணெண்னை பாட்டிலை பார்த்துவிட்டு, கும்பகோணம் கிழக்கு போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் கிழக்கு போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சக்கரபாணி, தன் வீட்டின் முன் மர்ம நபர்கள் மண்ணெண்னையை பாட்டிலில் நிரப்பி வீசிச் சென்றதாக புகார் செய்தார்.
இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா, ஏடிஎஸ்பிக்கள் ஜெயச்சந்திரன், சுவாமிநாதன், தடயவியல் துறை உதவி இயக்குநர் ராமச்சந்திரன் ஆகியோர் சக்கரபாணி வீட்டுக்கு சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து அந்த பகுதியை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விசாரணையை மேற்கொண்டனர்.
பின்னர் தஞ்சாவூரிலிருந்து மோப்ப நாய் டஃபி வரவழைக்கப்பட்டு துப்பறியப்பட்டதில், அந்த நாய் சிறிது தூரம் மட்டுமே ஓடியது. மேலும், அங்கு உடைந்து கிடந்த பாட்டிலை தடயவியல் துறையினர் ஆய்வு செய்து அதன் கைரேகைகளை சோதனை நடத்தினர். இதனைத்தொடர்ந்து போலீஸார் விசாரணையில், மண்ணெண்ணை நிரப்பப்பட்ட கண்ணாடி பாட்டிலை தூரத்திலிருந்து வீசியிருந்தால் அவை சிதறிய நிலையில் காணப்படும்.
ஆனால் தெருவில் உடைந்த பாட்டில் சிதறாமல் ஒரே இடத்தில் உடைந்து கிடந்ததால் போலீஸாருக்கு முதல் சந்தேகம் எழுந்தது. மேலும், கும்பகோணம் பகுதியில் பல்வேறு இந்து அமைப்புகளில் உள்ளவர்கள் செயல்பாடுகளோடு சக்கரபாணியை ஒப்பிடும்போது இவரது செயல்பாடுகள் ஏதும் குறிப்பிடும்படியாக இல்லை. தனிப்பட்ட நபர்களின் வெறுப்பும் ஏதும் இல்லை என சக்கரபாணி கூறியது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
பின்னர் சந்தேகம் அதிகமான நிலையில், சக்கரபாணி வீட்டுக்கு தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சதீஷ்குமார், கும்பகோணம் இந்து முன்னணி பொறுப்பாளர் வேதா, பாஜக வழக்கறிஞர் பிரிவு சுரேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர்.
மேலும் சக்கரபாணியை கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போது,
பாட்டிலில் எரிந்த திரியின் துணி, அவர்களது வீட்டில் இருந்த போர்வையிலிருந்து கிழிக்கப்பட்டதும் தெரியவந்தது.
சக்கரபாணி மற்றும் அவரது மனைவியிடம் போலீஸார் தனித்தனியாக விசாரித்த போது இருவரும் உண்மையை ஒப்புக் கொண்டதாகவும், விளம்பரத்துக்காகவும், போலீஸார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதால் இந்த நாடகத்தை அரங்கேற்றம் செய்ததாக சக்கரபாணி ஒப்புக் கொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்திய குற்றவியல் சட்டம் 436 (வெடிபொருளால் கட்டிடத்தை சேதப்படுத்த முயற்சி) உள்ளிட்ட 6 பிரிவுகளின்
கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.