ஆத்தூரில் இலவச மின்சார இணைப்பு பெற அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாகவும், பின்னரும்கூட அவர்கள் மின் இணைப்பு தர மறுப்பதாகவும்கூறி மழைவாழ் மக்கள் சங்கத்தினர் அம்மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்தூர் மின் கோட்ட உதவி செயற்பொறியாளராக உள்ள கருப்பண்ணன் என்பவர் மலை கிராமங்களான வானாபுரம், கல்லுக்கட்டு மற்றும் தலைவாசல் கெங்கவல்லி ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்களிடம் இலவச மின் இணைப்பிற்கு ரூ.5,000 முதல் 20,000 லஞ்சம் பெற்றுக் கொண்டு மின் இணைப்பு வழங்க மறுப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மலை கிராமங்களில் சாலை வசதி செய்து தரக்கோரியும் முழக்கங்கள் எழுப்பினர்.
இவர்கள் முழக்கங்கள் எழுப்பி வந்த நிலையில், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராடவோ முழக்கங்கள் எழுப்பவோ அவர்கள் அனுமதி பெறவில்லை எனக் கூறி, அவர்களின் ஒலிபெருக்கி இணைப்பை துண்டிக்க ஆத்தூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் திடீரென அறிவுறுத்தினார்.
இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், ஆய்வாளர் செந்தில்குமாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலில் ஈடுபட முயற்சித்தனர். அவர்களை மற்ற போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.